வடமாநிலங்களில் வழக்கமாக இந்த மாதத்தில் எல்லாம் வெயில் குறைந்து குளிர்காலம் ஆரம்பித்திருக்கும். ஆனால், இப்போதோ நிலைமை வேறுவிதமாக இருக்கிறது. இப்போதுதான் கோடைக்காலம் தொடங்கியது போல டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் வெயில் வாட்டிக்கொண்டிருக்கிறது. அக்டோபர் மாதத்தில் சராசரி குறைந்தபட்ச வெப்பம் 26.92 டிகிரி செல்சியஸ் என 121 வருடத்தில் இல்லாத புதிய உச்சமாக பதிவாகியுள்ளது.
அக்டோபர் மாதத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் முந்தைய ஆண்டுகளைப் போல குறையவில்லை எனவும் நவம்பர் மாதத்தின் முதல் பாதியில் குளிர்காலத்தின் அறிகுறியே இருக்காது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நவம்பர் மாத பிற்பகுதியிலாவது குளிர்காலம் தென்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மத்திய மற்றும் வட இந்தியாவில் குளிர்காலத்தின் தாக்கத்தை தீவிரமாக்கும் என எதிர்பார்க்கப்பட்ட "லா நினா" இன்னும் உருவாகவில்லை எனவும் இதற்கான காரணம் என்ன என்பதும் இதுவரை புதிராகவே உள்ளது எனவும் இந்திய வானிலை மையத்தின் தலைவரான மிருதுன்ஞ்சய் மகாபாத்ரா தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கர், டெல்லி, ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் அக்டோபர் மாதத்தில், 1901ஆம் ஆண்டு முதல் இல்லாத புதிய உச்சமாக வெப்பம் பதிவாகி இருந்தது என இந்திய வானிலை மைய புள்ளி விவரங்களில் தெரியவருகிறது.
தென்மேற்கு பருவ மழை தாமதமாக நிறைவு பெற்றது, மேற்கத்திய காற்று மண்டலங்களின் நகர்வு போன்றவை அக்டோபரில் வெப்பம் குறையாமல் இருந்ததற்கு காரணமாக கருதப்படுகிறது. மேலும் இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா, மற்றும் அரபிக்கடலில் உருவாகிய 4 காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் இத்தகைய குறையாத வெப்ப நிலைக்கு காரணம் என இந்தியா வானிலை மையம் கருதுகிறது. ஏற்கனவே "லா நினா" காரணமாக இந்த வருடம் டிசம்பர்-ஜனவரி மாதங்களில் வட இந்தியா மற்றும் மத்திய இந்தியாவில் குளிர் அதிகமாக இருக்கும் என கருதப்பட்டது. அதே சமயத்தில் ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட தென்பகுதிகளில் பருவமழை சராசரியை விட அதிகமாக இருந்தாலும், சராசரி வெப்பமும் அதிகமாகவே இருக்கும் என, கருதப்படுகிறது.