இந்தியா முகநூல்
இந்தியா

கொல்கத்தா மருத்துவர் கொலை: வெடிக்கும் நாடு தழுவிய போராட்டம்... இன்று 24 மணி நேர வேலைநிறுத்தம்!

PT WEB

கொல்கத்தா பெண் மருத்துவரின் கொலைக்கு நீதிகேட்டு நாடு தழுவிய அளவில் 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தை இந்திய மருத்துவ சங்கம் இன்று முன்னெடுக்கிறது. இதன் காரணமாக மருத்துவமனைகளில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவுகள் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைய வழியாக நடைபெற்ற இந்திய மருத்துவ சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு புறக்கணிப்பு செய்யப்படும் என்றும், பின்னர் தர்ணா போராட்டம், மனித சங்கிலி, அமைதி ஊர்வலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனைகளில் போராட்டம் நடத்தப்பட உள்ளன. அனைத்து அரசு மருத்துவர்களும் கருப்பு பட்டை அணிந்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய உள்ளனர்.

பயிற்சி மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர். அந்தவகையில்,

  • கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் 200-க்கும் மேற்பட்டோர் மெழுகுவர்த்தி ஏந்தியும், செல்போனில் டார்ச் அடித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சையில் மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகள், பயிற்சி மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு கண்டன பேரணி நடத்தினர்.

  • திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மெழுகுவர்த்தியுடன் ஊர்வலமாக சென்று மௌன அஞ்சலி செலுத்தினர். சேலத்தில் அமைதி பேரணி நடத்திய மருத்துவ சங்கத்தினர், இதுபோன்ற கொடுஞ்செயலுக்கு எதிராக அனைவரும் ஒருமித்த குரல் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

  • தமிழகத்தை போன்று உத்தரகாண்ட், ராஜஸ்தான், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களிலும் பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மாணவர்களின் கண்டன பேரணி நடைபெற்றது.

  • ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியவாறு பேரணியில் பங்கேற்றனர். மேலும், பெண் பயிற்சி மருத்துவர் கொலையை கண்டித்து இந்திய மருத்துவ சங்கம் நாடு தழுவிய அளவில் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகிறது. இதற்கு தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது.