இந்தியா

மாறன் சகோதரர்களுக்கு விலக்களிக்க சிபிஐ கடும் எதிர்ப்பு

மாறன் சகோதரர்களுக்கு விலக்களிக்க சிபிஐ கடும் எதிர்ப்பு

rajakannan

பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில், மாறன் சகோதரர்கள் விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்களிக்கக் கூடாது என சிபிஐ வலியுறுத்தியுள்ளது.

இது குறித்த வழக்கு விசாரணையின் போது, மாறன் சகோதரர்கள் ஆஜராகவில்லை. வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரும் மனுவுக்கு சிபிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதன் மீது வாதம் முன்வைக்க வேண்டியிருப்பதால், வழக்கு விசாரணையை ஒத்திவைக்க கலாநிதி, தயாநிதி சகோதரர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை டிசம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். 

இதற்கிடையே, வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதிலிருந்து நிரந்தர விலக்கு கோரி மாறன் சகோதரர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு, சிபிஐ தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இது குறித்து ஆவணங்கள் தாக்கல் செய்ய வேண்டியிருப்பதாக மாறன் சகோதரர்கள் தரப்பில் கூறப்பட்டதால், விசாரணையை நீதிபதி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரும் மனு, நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு கோரும் மனு ஆகிய இரு மனுக்கள் மீதும் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னரே, சிபிஐ வழக்கு மீதான குற்றச்சாட்டு பதிவு செய்வது தொடங்கும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

முன்னதாக, தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, சகோதரர் கலாநிதி மாறனின் சன் தொலைக்கட்சிக்கு சென்னை பி.எஸ்.என்.எல்லின் அதி விரைவு தொலைபேசி இணைப்புகளை, முறைகேடாக வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.