ஜெகன்மோகன் ரெட்டி வீடு எக்ஸ் தளம்
இந்தியா

ஆந்திரா| ஆட்டம் ஆரம்பம்.. ஜெகன் வீடு முன்பு இருந்த ஆக்கிரமிப்பு கட்டடங்கள்.. இடித்த கார்ப்பரேஷன்!

ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வீட்டின் முன்பு ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டடங்கள் இடிக்கப்பட்டன.

Prakash J

நாடு முழுவதும் நடைபெற்ற 18வது மக்களவைத் தேர்தலின்போது, ஆந்திர மாநிலத்திற்கும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் தெலுங்கு தேசம் மற்றும் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. அம்மாநில முதல்வராக மீண்டும் சந்திரபாபு நாயுடு பதவியேற்றுள்ளார்.

இந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வீட்டின் முன்பு ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டடங்கள் இடிக்கப்பட்டன. கிரேட்டர் ஹைதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் அதிகாரிகள் இன்று, லோட்டஸ் பாண்டில் உள்ள ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டியின் வீட்டின் முன்புறம் இருந்த சட்டவிரோத கட்டடங்களை அகற்றினர்.

ஜெகனின் பாதுகாப்பிற்காக சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கட்டுமானங்கள் அகற்றப்பட்டது. இது, பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியதாகப் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஹைதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சந்திரபாபு நாயுடு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்னர், பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என ஜெகன் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: நாகஸ்த்ரா-1| இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தற்கொலைப் படை ட்ரோன்.. விரைவில் ராணுவத்தில் இணைப்பு!