குஜராத் எக்ஸ் தளம்
இந்தியா

குஜராத்| 88 வீடுகள்.. 700 மக்கள்.. போலி ஆவணம் மூலம் ஒரு கிராமத்தையே விற்ற 6 பேர்.. நடந்தது என்ன?

குஜராத்தில் கிராம் ஒன்றையே ஆறு பேர் போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Prakash J

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் ஜிஎஸ்டி தலைமை ஆணையராகப் பணிபுரிந்து வரும் சந்திரகாந்த் வால்வி என்பவர், தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து மகாராஷ்டிர மாநிலம் சதாரா மாவட்டத்தில் உள்ள கண்டடி பள்ளத்தாக்கில் உள்ள ஜடானி என்ற கிராமத்தையே விலைக்கு வாங்கியதாக, கடந்த மே மாதம் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இந்தக் கிராமத்தின் மொத்த பரப்பளவு, 620 ஏக்கர். ஜடானி கிராமத்தின் நிலப்பகுதிகளை அரசு கையகப்படுத்தப் போவதாகக் கூறி, அக்கிராம மக்களை ஏமாற்றி ஜிஎஸ்டி ஆணையர் சந்திரகாந்த் வால்வி வாங்கியது விசாரணையில் தெரிய வந்தது. இந்த நிலையில் இதேபோன்ற சம்பவம் குஜராத்தில் தற்போது நடைபெற்றுள்ளது.

குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்டம் தேகாமில் உள்ள ஜூனா பஹாடியா கிராமத்தில்தான் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. கடந்த மாதம் 13ஆம் தேதி, காந்திநகர் மாவட்டத்தின் துணைப் பதிவாளர் அலுவலகத்தில் ஒரு நில ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு அந்த நிலத்தை, ஆறு பேர் ராஜ்கோட்டைச் சேர்ந்த ஒருவருக்கு கடந்த 13ஆம் தேதி விற்பனை செய்துள்ளனர்.

இதுதொடர்பாக 7 பேர் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது அந்த நிலத்தில், 700க்கும் மேற்பட்ட மக்களும் 88 வீடுகளும் கொண்ட ஒரு முழு கிராமமும் விற்கப்பட்டிருப்பதுதான் ஆச்சர்யமான செய்தி. மோசடியான, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி 2 கோடி ரூபாய்க்கு இந்த நிலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: 'UPSC Exam'இல் முறைகேடாக தேர்ச்சியா? வழக்கு தொடர்ந்த ஓம் பிர்லா மகள்.. டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி!

அதாவது, பிகாஜி தாக்கூர் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த நிலம், 1987லேயே ஒருசிலருக்கு விற்கப்பட்டுள்ளது. மீதி நிலம்தான் அவருக்குப் பிறகு அவரது சந்ததியினருக்கு சென்றுள்ளது. இதில் நிலத்தை வாங்கியவர்கள் அதில் வீடு கட்டி குடியேறியுள்ளனர். அந்த வகையில் அங்கு தற்போது 88 குடுபங்கள் உள்ளன. இந்த நிலையில்தான் பிகாஜி தாக்கூரின் வாரிசுகள் போலி ஆவணங்கள்மூலம் அவர்களுக்கு விற்ற இடத்தையும் சேர்த்து மொத்தமாய் விற்றுள்ளனர். அதாவது, இந்த நிலத்தின் உரிமையைக் காட்டி பிகாஜி தாக்கூரின் வாரிசுகள் கடன் வாங்கியுள்ளனர்.

அதனை ஈடுகட்டவே இந்த மொத்த கிராமத்தையும் விற்றிருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் புகார் பதிவு செய்து நான்கு பேரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். என்றாலும், இந்த சம்பவம் குஜராத் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தில் பாஜக தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ஜெகதீஷ் தாக்கூர் குற்றஞ்சாட்டியுள்ளார். எனினும், இந்தக் குற்றச்சாட்டை தேகாம் பாஜக எம்எல்ஏ பல்ராஜ் சிங் மறுத்துள்ளார். ”இந்தப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும். பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு நீதி வழங்கவும் அரசு உறுதி பூண்டுள்ளது” என அவர் உறுதியளித்துள்ளார்.

இதையும் படிக்க: மத்திய பட்ஜெட் 2024| வருமான வரி விதிப்பு முறையில் செய்யப்பட்ட மாற்றங்கள் என்ன.. முழு விவரம்!