கான்பூர் ஐ.ஐ.டி.யில் ராக்கிங்கில் ஈடுபட்ட மாணவர்கள் 22 பேரை சஸ்பெண்ட் செய்து நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
ராக்கிங் காரணமாக இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த முதலாமாண்டு மருத்துவ மாணவர் அமன் கச்ரூ உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதன்பின்னர், யுஜிசி-யும் ராக்கிங் எதிர்ப்பு உதவி மையத்தை உருவாக்கியது. இந்த உதவி மையத்திற்கு நாள்தோறும் பல்வேறு புகார்கள் வருகின்றன. அதேபோல், ராக்கிங் விவகாரத்தில் உச்சநீதிமன்றமும் கடும் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தது. இருப்பினும் ராக்கிங் பிரச்சனை தொடர்ந்து வருகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் சீனியர் மாணவர்கள் தங்களை ராக்கிங் செய்வதாக முதலாமாண்டு மாணவர்கள் சுமார் 30 பேர் கான்பூர் ஐ.ஐ.டி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். 50 சீனியர் மாணவர்களுக்கு எதிராக இந்த புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில், ஜீனியர் மாணவர்களை மேலாடைகளை களைந்துவிட்டு நடனமாட சொன்னதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து அமைக்கப்பட்ட விசாரணைக்குழு, 22 மாணவர்கள் ராக்கிங்கில் ஈடுபட்டதை உறுதி செய்து ஐ.ஐ.டி நிர்வாகத்திடம் அறிக்கை அளித்தது.
இதனை அடுத்து, 22 மாணவர்களையும் சஸ்பெண்ட் செய்து ஐ.ஐ.டி நிர்வாகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அதில், 16 மாணவர்கள் 3 ஆண்டுகளும், 6 மாணவர்கள் ஒராண்டும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர்களை விடுதியில் இருந்து வெளியேறுமாறும் ஐ.ஐ.டி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த மாணவர்கள் தங்களது சஸ்பெண்ட் காலம் முடிவடைந்த பிறகுதான் மீண்டும் படிப்பை தொடர முடியும்.