Igor Stimac pt desk
இந்தியா

“2 ஆண்டு வழங்காத ஊதியத்தை 10 நாட்களில் தரவேண்டும்: இல்லையென்றால்...” - இகோர் ஸ்டிமாக் கடிதம்

2 ஆண்டு வழங்காத ஊதியத்தை பத்து நாட்களில் தராவிட்டால் FiFA - வில் வழக்கு தொடரப் போவதாக இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளராக இருந்த இகோர் ஸ்டிமாக், அகில இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு கடிதம் எழுதியுள்ளார்.

webteam

செய்தியாளர்: சந்தானகுமார்

இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளராக இருந்த இகோர் ஸ்டிமாக் ஓரிரு நாட்களுக்கு முன்பு பணியில் இருந்து நீக்கப்பட்டார். உலகக்கோப்பை தகுதி சுற்றுப் போட்டிகளில் இந்திய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாத காரணத்தால் அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார். இகோர் ஸ்டிமாக் பணிக்காலம் முடிய இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில் அவருக்கு மூன்று மாதத்திற்கான ஊதியத்தை மட்டும் வழங்க அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு முடிவெடுத்தது.

Igor Stimac

ஆனால், ஏற்கனவே அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பில் உள்ள நிர்வாகிகள் மற்றும் முன்னாள் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் மத்தியில் மிகபெரிய கருத்து வேறுபாடுகள் உள்ளதால் இதனை இகோர் ஸ்டிமாக் ஏற்கவில்லை. இந்த நிலையில் அகில இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ள இகோர் ஸ்டிமாக், தனக்கு 2 ஆண்டு வழங்காத ஊதியத்தை 10 நாட்களில் வழங்கவில்லை என்றால் FiFA-வில் வழக்கு தொடரப் போவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “இந்திய கால்பந்து அணி வளர்ச்சி அடையாமல் இருந்ததற்கு காரணம் அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் கல்யாண் சுபேதான். ஆசிய விளையாட்டு போட்டியில் தேர்வு செய்த வீரர்கள் பட்டியலை மாற்றினார்கள். ஐ.எஸ்.எல் கிளப் அணிகளுக்கான வீரர்கள் பட்டியலை மாற்றினார்கள். ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கு மிக மோசமான ஏற்பாடுகளை செய்தனர்” என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இகோர் ஸ்டிமாக் இரண்டு ஆண்டு ஊதியம் 8 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.

Igor Stimac

இருப்பினும் கால்பந்து விளையாட்டில் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளும் நேரத்தில் EXIT CLAUS சேர்க்கப்படும். அணிக்கு வெற்றி கிடைக்கவில்லை என்றால் அணியின் பயிற்சியாளர் நீக்கப்படுவது வழக்கமான ஒன்றாக உள்ள நிலையில், இகோர் ஸ்டிமாக் இப்படி கூறுவதற்கு காரணம், அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு. அவர் ஒப்பந்தத்தில் EXIT CLAUS இல்லை, இப்படி ஒரு ஒப்பந்தத்தை யார் மேற்கொண்டது என அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு மீது கேள்வி எழுந்துள்ளது.