இந்தியா

சபரிமலை கோயில் பாதுகாப்பு அதிகாரியாக ஐஜி ஸ்ரீஜித் மீண்டும் நியமனம் !

webteam

சபரிமலை ஐயப்பன் கோவிலின் பாதுகாப்பு அதிகாரியாக  ஐஜி ஸ்ரீஜித் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தனது பாதுகாப்பு பணியை டிசம்பர் 15 ஆம் தேதி முதல் தொடங்குவார். பம்பா முதல் சபரிமலை ஐயப்பன் கோவில் சன்னிதானம் வரை ஐஜி ஸ்ரீஜித் தலைமையிலான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இந்தப் பாதுகாப்பு பணியை ஐஜி ஸ்ரீஜித் மகர விளக்கு பூஜை முடியும் வரை மேற்கொள்வார் என தெரிகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு கேரளா, தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று போராட்டங்கள் உச்சக்கட்டத்தை எட்டிய நேரம். அப்போதுதான்  சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஐப்பசி மாத வழிபாட்டுக்காக 17 ஆம் தேதி மாலை மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. 

ரஹானா பாத்திமாவுக்கு பாதுகாப்பு

நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து கோயிலுக்கு பெண்கள் சிலர் நேற்று சென்றனர். ஆனால் கோயிலுக்குச் சென்ற பெண்களை வழியிலேயே போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தினர். இதனால், அங்கு பதட்டமான சூழல் நிலவியது. இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவில் சந்நிதானம் 19 ஆம் தேதி உச்சக் கட்ட பரபரப்பை எட்டியது. கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த பெண்ணியவாதி ரஹானா பாத்திமா இருமுடிக் கட்டிக்கொண்டு சபரிமலைக்கு வந்தார். அவருடன் ஆந்திரம் மாநிலத்தைச் சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் கவிதாவும் உடன் வந்திருந்தார். 

இந்த இரு பெண்களுக்கும் காவலர்கள் பயன்படுத்தும் கவசங்களை அணிவித்து ஐஜி ஸ்ரீஜித் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வந்தனர். சந்நிதானத்தின் கீழ்ப்பகுதியான நடைப்பந்தலில், பக்தர்கள் திரளாக திரண்டு சரண கோஷம் எழுப்பி, அவர்களின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சபரிமலை சந்நிதானம் அருகே பதற்றம் நிலவியது. இது குறித்து உடனடியாக தலையிட்ட கேரள அரசு சபரிமலை போராடுவதற்கான இடம் அல்ல. சபரிமலைக்கு வந்து உங்கள் போராட்ட எண்ணங்களையும், வலிமையையும் வெளிப்படுத்த வேண்டாம். இதனையடுத்து சந்நிதானத்துக்கு செல்ல முடியாமல், இரு பெண்களும் பம்பைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

இதனிடையே, சபரிமலையில் காவல்துறையினர் பிரச்னையை ஏற்படுத்தமாட்டார்கள் என ஐ.ஜி. ஸ்ரீஜித் கூறினார். பக்தர்களுடனான மோதல் தங்களுக்கு தேவையில்லை, தாங்கள் சட்டத்தினை பின்பற்றுகிறோம் என தெரிவித்தார். ஆனால் ஸ்ரீஜித்தின் நடவடிக்கை பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது. ஸ்ரீஜித் அந்த இரு பெண்களுக்கு காவலர்கள் கவசம் மாட்டி கூட்டிச் சென்றது சரியான நடவடிக்கை அல்ல என கேரள எதிர்கட்சிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

ஐயப்பன் முன்பு கண்ணீர் !

இதனையடுத்து ஐப்பசி மாதப் பூஜை நடை சாத்தும் கடைசி நாளன்று அதிகாலை ஐஜி ஸ்ரீஜித்தும், பக்தர்களில் ஒருவராக நின்றுக்கொண்டிருந்தார். காவல் உடை இல்லாமல் சாதாரண டீஷர்ட் மற்றும் வேட்டியில் நின்று இருந்தார் ஸ்ரீஜித். கோயில் கருவறையின் கதவுகள் திறக்கப்பட்டதும், சுவாமியை கையெடுத்து வணங்கிய ஸ்ரீஜித்தின் கண்களில் இருந்து நீர் வந்துக்கொண்டு இருந்தது. அப்போது பக்தி பரவசத்தில் உணர்ச்சிப் பெருக்கோடு ஐயப்பனை வணங்கினார் ஸ்ரீஜித். இப்போது அவர் சுவாமி தரசினம் செய்தப் படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கெனவே ஐஜி ஸ்ரீஜித், நானும் ஒரு ஐயப்ப பக்தன் என ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.