இந்தியா

‘நோ பார்க்கிங்ல வண்டிய விடாதீங்க’: ஜிஎஸ்டி உடன் அபராதம் கட்டனும்..!

webteam

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதை அடுத்து ‘நோ பார்க்கிங்’ பகுதியில் வாகனத்தை நிறுத்தியவரிடம் அபராதம் விதித்து வழங்கப்பட்ட ரசீதில் ஜிஎஸ்டி வரியும் குறிப்பிடப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே நாடு, ஒரே வரி என்ற பெயரில் கடலை மிட்டாய் முதல் கார் வரை அனைத்திலும் வாட்டி வதைக்கிறது ஜிஎஸ்டி. இந்நிலையில், மும்பையில் உள்ள காண்டீவலி பகுதியில் ‘நோ பார்க்கிங்’ பகுதியில் ஒருவர் நான்கு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். இதைக் கண்ட போக்குவரத்து போலீஸார் காரை கைப்பற்றி, கார் உரிமையாளரிடம் அபராதம் விதித்ததற்கான ரசீதை அளித்தனர். அதில் அபராதத் தொகை ரூ.200-ம், வண்டியை கட்டி காவல் நிலையத்திற்கு இழுத்து சென்றதற்கு ரூ.200-ம், ஜிஎஸ்டி மத்திய அரசுக்கு ரூ.36-ம், மாநில அரசுக்கு ரூ.36-ம், மொத்தம் ரூ.472 செலுத்துமாறு ரசீது கொடுத்துள்ளனர். இதைக் கண்ட கார் உரிமையாளார், அபராதத் தொகைக்கே வரியா என்று வருத்தத்துடன் தொகையை போலீசாரிடம் கொடுத்து விட்டு காரை எடுத்து சென்றுள்ளார்.

ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தி, சொகுசு கார்கள், பைக்குகள் விலையை குறைத்து, அபராதத்திற்கு ஜிஎஸ்டி வரி விதித்தற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. முன்னதாக ஆன்லைன் இ-சலான் மூலம் அபராதத் தொகையை பரிவர்த்தனை செய்வதற்கு 15% லிருந்து 18% ஆக வரியை உயர்த்தியதாக போக்குவரத்து போலீசார் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.