உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு, ஆட்சியில் உள்ளது. இந்த நிலையில் அம்மாநில அரசின் திட்டங்களையும் சாதனைகளையும் சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்களுக்கு ரூ.8 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநில தகவல் தொலைத்தொடர்பு துறையால் தயாரிக்கப்பட்ட உத்தரப் பிரதேச டிஜிட்டல் மீடியா பாலிசி 2024க்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த புதிய கொள்கையின்படி, எக்ஸ், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் உத்தரப்பிரதேச அரசுக்கு ஆதரவாக வீடியோக்கள், பதிவுகள், ரீல்ஸ் பதிவிடுபவர்களுக்கு அவர்களின் பாலோயர்கள் அடிப்படையில் 4 வகைகளாகப் பிரிக்கப்பட்டு ரூ.5 லட்சம், ரூ.4 லட்சம், ரூ.3 லட்சம் மற்றும் ரூ.2 லட்சம் வழங்கப்படும்.
யூடியூப்பில் வீடியோ, ஷார்ட்ஸ் பதிவிடுபவர்களுக்கு அவர்களின் சப்ஸ்க்ரைபர்கள் அடிப்படையில் 4 வகைகளாகப் பிரிக்கப்பட்டு ரூ.8 லட்சம், ரூ.7 லட்சம், ரூ.6 லட்சம் மற்றும் ரூ.4 லட்சம் வழங்கப்படும்.
உத்தரப்பிரதேசம் மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்களும் இத்திட்டத்தின் மூலம் பயனடைய முடியும். மேலும் சமூக வலைதளங்களில் அரசுக்கு எதிராக, ஆட்சேபனைக்குரிய செய்திகளை வெளியிடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உ.பி. அரசு அறிவித்துள்ளது.