Arundhati Roy Twitter
இந்தியா

”நீங்கள் பாஜகவிற்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால் கேரளாவே எரிந்து சாம்பலாகும்” - எழுத்தாளர் அருந்ததி ராய்

கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றது குறித்து பிரபல எழுத்தாளரும் சமூக ஆரவலருமான அருந்ததி ராய், பாஜகவைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Prakash J

கேரள மாநிலம் ஃபோர்ட் கொச்சியில் கடந்த 14ஆம் தேதி 'யுவதாரா' இளைஞர் இலக்கிய விழா நடைபெற்றது. இதில் புக்கர் பரிசு வென்ற எழுத்தாளர் அருந்ததி ராய் கலந்துகொண்டார். இதில் பேசிய அவர், “கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான அன்று இரவு என்னால் தூங்கவே முடியவில்லை. நான் மகிழ்ச்சியாக இருந்தேன். கேரள சட்டசபை தேர்தலில் பாஜகவால் ஓர் இடத்தில்கூட வெற்றிபெற முடியவில்லை. வாய்ப்பு கிடைத்தால் கேரளாவை பாஜக தீயிட்டுக் கொளுத்தும்.

பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில் கேரள பயணத்தின்போது கிறிஸ்தவ மதத் தலைவர்களைச் சந்தித்ததைக் கண்டு நான் மிகப்பெரிய ஏமாற்றம் அடைந்தேன். தவிர, அவருக்கு மக்கள் பூ மழை பொழிந்ததைக் கண்டும் நான் மிகவும் வருத்தப்பட்டேன். இது, மிகவும் மோசமானது. கிறிஸ்தவ தேவாலயத்தின் ஒரு பிரிவு அவரைச் சென்று சந்தித்தது. நாட்டில் என்ன நடக்கிறது என்று அவர்களுக்குத் தெரியாத வரை இது எப்படி சாத்தியமாகும்? மணிப்பூரில், சத்தீஸ்கரில் என்ன நடக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? ஜார்கண்டில் கிறிஸ்தவர்களுக்கு என்ன நடக்கிறது என்று தெரியுமா? கடந்த இரண்டு ஆண்டுகளில், கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது, 300 தாக்குதல்கள் நடந்துள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? இவர்களுடன் உங்களால் எப்படிப் பேச முடியும்?" எனக் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் கடந்த 10ஆம் தேதி நடைபெற்றது. 224 தொகுதிகளுக்கு ஒரேகட்டமாக நடைபெற்ற இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை கடந்த 13ஆம் தேதி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் 135 இடங்களில் தனி பெரும்பான்மையுடன் (ஆட்சியமைக்க 113 இடங்களே போதும் என்ற நிலையில்) வெற்றி பெற்று விரைவில் ஆட்சி அமைக்க இருக்கிறது. அதேநேரத்தில், ஆட்சியில் இருந்த பாஜக அரசு வீழ்ந்தது நாடு முழுவதும் பேசுபொருளாகி இருக்கிறது. இதன்காரணமாகவே, அருந்ததி ராயும் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்று கூறப்படுகிறது.

’தி காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்’ என்ற புத்தகத்தை எழுதியதற்காக அருந்ததி ராய்க்கு புக்கர் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.