இந்தியா

3 மாதம் இ.எம்.ஐ கட்டவில்லை என்றால் என்ன நடக்கும் ? அதிர்ச்சியான தகவல்

3 மாதம் இ.எம்.ஐ கட்டவில்லை என்றால் என்ன நடக்கும் ? அதிர்ச்சியான தகவல்

webteam

மூன்று மாதங்களுக்கு ஒரு கடனாளி இ.எம்.ஐ கட்டவில்லை என்றால் அது அவர்களுக்கு பெரிய அளவில் இழப்பு தான் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஊரடங்கு எதிரொலியால் சம்பளத்திற்கு பணிபுரியும் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியை குறைக்க மத்திய ரிசர்வ் வங்கி சலுகை வழங்கியது. அதன்படி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய மாதங்களுக்கான கடன்களின் இ.எம்.ஐ-யை வசூலிக்காமல் தவிர்க்க வேண்டும் என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியது. இதைத்தொடர்ந்து வங்கிகளும் மூன்று மாதத்திற்காக இ.எம்.ஐ வேண்டாம் என அறிவித்தன. இதனால் கடன்பெற்றவர்கள் வங்கிகளின் நிபந்தனைகளை அறியாமல் பெரும் பாரம் நீங்கியாத உணர்ந்தனர்.

இந்நிலையில், நிபந்தனைகள் புரிந்த பின்னர், 3 மாதங்களுக்கான இ.எம்.ஐ கட்டாமல் இருப்பதைவிட, கட்டுவது மேல் என தெரியவந்துள்ளது. ஏனென்றால் வங்கிகளின் நிபந்தனைப்படி, 3 மாதங்களுக்கு இ.எம்.ஐ கட்டவில்லை என்றாலும், அதற்கான வட்டியை கட்ட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பார்த்தால் வாடிக்கையாளர் பெற்ற கடனுக்கான காலத்திற்கு ஏற்றவாறு அவர்கள் கூடுதலான தொகையை செலுத்த வேண்டும்.

ஒரு நபர் 36 மாதங்கள் இ.எம்.ஐ கால அவகாசம் கொண்டிருந்தால், அவர் இந்த மூன்று மாதங்களை தவிர்த்தவிட்டு, பின்னர் கூடுதலாக அந்த மூன்று மாதங்களையும் செலுத்த வேண்டும். அதுமட்டுமில்லாமல் மேலும் ஒரு மாத தொகையை வட்டியாக செலுத்த வேண்டும். மொத்தத்தில் 36 மாதங்கள் செலுத்த வேண்டிய தவணை 37 (தள்ளிவைக்கப்பட்ட 3 மாதங்கள் அடக்கம்) மாதங்களாக மாறும். இதேபோன்று 60 மாதங்கள் இ.எம்.ஐ செலுத்த வேண்டிய நபர் கூடுதலாக 2 மாதங்களுக்கான இ.எம்.ஐ தொகையை வட்டியாக மட்டுமே செலுத்த வேண்டும்.

10 வருடங்களுக்கு 5 மாத இ.எம்.ஐ தொகையும், 15 வருடங்களுக்கு 8 மாத இ.எம்.ஐ தொகையும், 20 வருடங்களுக்கு 15 மாத இ.எம்.ஐ தொகையும் கூடுதலாக செலுத்த வேண்டும். 15 மாத இ.எம்.ஐ தொகை ஒரு நபர் கூடுதலாக செலுத்துவதற்கு பதிலாக அவர் இந்த 3 மாத இ.எம்.ஐ தொகையை செலுத்துவது எவ்வளவோ மேல் என்பது அனைவருக்கும் புரியும். அப்படி பார்த்தால் இந்த 3 மாத இ.எம்.ஐ தொகையை ஒருநபர் செலுத்தாமல் இருப்பதை விட, செலுத்துவது தான் சிறந்த முடிவாக இருக்கும் என்று தோன்றுகிறது.

அதேசமயத்தில் 1, 2 அல்லது மூன்று வருடங்கள் இ.எம்.ஐ செலுத்தும் நபர்களுக்கு, தற்போது அவசர செலவு இருந்தால் இந்த 3 மாதங்கள் இ.எம்.ஐ தொகையை கட்டாமல் விடுவது பயனிக்கும். ஆனால் அவர்களும் பின்னர் அந்த 3 மாத இ.எம்.ஐ-யும் கூடுதலாக வட்டியும் செலுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த முறை அனைத்து வங்கிகளை பொறுத்து மாறுபட வாய்ப்புள்ளது எனவும், கடன் வாங்கிய சலுகைகளை பொருத்தும் மாறலாம் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே கூடுதலாக விவரங்களை அறிய தங்களின் வங்கி உதவி எண்களை அழைப்பது சிறந்தது.