இந்தியா

“ஊரடங்கை நீட்டித்தால் மாநில பொருளாதாரம் அழிந்துவிடும்” - நாராயணசாமி

“ஊரடங்கை நீட்டித்தால் மாநில பொருளாதாரம் அழிந்துவிடும்” - நாராயணசாமி

webteam

மே 17ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீட்டித்தால் மாநில பொருளாதாரம் முற்றிலுமாக அழிந்து விடும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, “மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு எத்தனை நாளைக்கு நீடிக்கும் என்பது தெரியவில்லை. மே 17ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீட்டித்தால் மாநில அரசின் பொருளாதாரம் முற்றிலுமாக அழிந்து விடும். மக்களின் உயிர் முக்கியம் தான், ஆனால் மக்களுக்கு உணவளிக்க மாநில அரசுக்கு பொருளாதாரம் தேவைப்படுகின்றது. ஆகவே அடுத்த ஊரடங்கு முடிவை பிரதமர் எடுப்பதற்கு முன்பு மாநில முதலமைச்சர்களை கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

“இல்லையெனில் மாநில அரசு கேட்கும் நிதியையாவது மத்திய அரசி வழங்க வேண்டும். மேலும் கொரோனா பாதித்த பகுதிகளை நிற அடிப்படையில் பிரிப்பதை மத்திய அரசு முடிவெடுக்கக்கூடாது. அதை மாநில அரசின் நிர்வாகத்திற்கு விட்டு விட வேண்டும். அப்போது தான் அனைத்து பகுதி மக்களையும் முழுவதுமாக நிர்வகிக்க முடியும்” என அவர் கூறினார்.

கொரோனா வைரஸால் நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம், பின்னர் மே 3ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. தற்போது மே 17ஆம் தேதி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்பட்டிருப்பது குறிப்பிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.