இந்தியா

இந்தியா இதை செய்தால் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு - மலேசிய அமைச்சர்

இந்தியா இதை செய்தால் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு - மலேசிய அமைச்சர்

ஜா. ஜாக்சன் சிங்

மலேசியாவில் அனைத்து துறைகளிலும் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டுமென்றார், இந்திய அரசு வேண்டுகோள் விடுக்க வேண்டும் என மலேசிய மனிதவளத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்தார்.

மலேசியாவில் லட்சக்கணக்கான தமிழர்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு அங்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் போதிலும், அது போதுமானதாக இல்லை எனக் கூறப்படுகிறது. இரண்டு துறைகளில் மட்டுமே தமிழர்கள் பணியமர்த்தப்பட்டு வருவதால், ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மலேசிய தமிழர்கள் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், ராமநாதபுரத்துக்கு வருகை தந்த மலேசிய மனிதவளத் துறை அமைச்சரான டத்தோஸ்ரீ எம். சரவணன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இதுதொடர்பாக அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து அவர் கூறுகையில், "தமிழகத்தில் இருந்து மலேசியாவில் வேலைக்கு வரும் தமிழர்களுக்கு உதவுவதற்காக, மலேசியாவில் புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த செயலியின் மூலம் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து புகார் அளிக்கலாம். இதில் உடனடி நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது மலேசியாவில் இரு துறைகளில் மட்டுமே தமிழர்கள் பணியாற்ற உடன்பாடு இருக்கிறது. இந்திய அரசு வேண்டுகோள் விடுத்தால், அனைத்து துறைகளிலும் பணிபுரிய தமிழர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்" என்றார்.