ராமர் கோயில் பிரச்னை தொடர்பாக தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் அறிவித்தால் அக்கட்சி மக்களவை தேர்தலில் ஆதரவளிப்பது தொடர்பாக பரிசீலிப்போம் என விஸ்வ ஹிந்து பரிஷத் தெரிவித்துள்ளது.
2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், பிரதமர் மோடியின் மத்திய அரசுக்கு முன்னெச்சரிக்கை அளிக்கும் வகையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ராமர் கோயில் பிரச்னைக் குறித்து மோடி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள விஸ்வ ஹிந்து பரிஷத் செயல் தலைவர் அலோக் குமார், “ஒருவேளை காங்கிரஸ் ராமர் கோயில் பிரச்னையை தங்கள் தேர்தல் அறிக்கையில் வெளியிட்டால், மக்களவை தேர்தலில் அந்தக் கட்சிக்கு ஆதரவளிப்பது தொடர்பாக பரிசீலனை செய்வோம்” என தெரிவித்துள்ளார்.
ஆயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதில் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் விஸ்வ ஹிந்து பரிஷத் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு கொடுக்கப்படும் நெருக்கடியாக கருதப்படுகிறது. 1964ஆம் ஆண்டு அப்போதைய ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கரால் நிறுவப்பட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு, தொடர்ந்து ராமர் கோயில் கோரிக்கை எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த அமைப்பு இந்து தேசம் மற்றும் இந்துத்துவா ஆகிய கொள்கைகளை பின்பற்றி வருகிறது.