pm modi, ramar temple pt temple
இந்தியா

“காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவிலுக்குள் புல்டோசர் செல்லும்” - உ.பியில் பிரதமர் மோடி பேச்சு

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவிலுக்குள் புல்டோசர் செல்லும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

PT WEB

நாட்டில் மக்களவைத் தேர்தல் பரபரப்பாக நடந்து வருகிறது. ஒவ்வொரு தேர்தலின் போதும் ஒவ்வொரு விவகாரம் பேசுபொருளாக இருப்பது போல், நடப்பு தேர்தலில் இட ஒதுக்கீடு, ராமர்கோயில் உள்ளிட்ட விவகாரங்கள் முன்னிலையில் உள்ளன. இடஒதுக்கீடு விவகாரத்தில் காங்கிரஸ், பாஜக என இரு கட்சிகளும் ஒருவர் மாற்றி ஒருவர் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றன.

அதேசமயத்தில் பாஜக ராமர் கோவிலை குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. அயோத்தி ராமர் கோவில் திறப்புவிழாவின் போது எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோது, அதை அவர்கள் ஏற்கவில்லை. அயோத்தி ராமரை அவர்கள் அவமதித்துவிட்டார்கள் என்று பாஜக தொடர்ச்சியாக காங்கிரஸ் மேல் குற்றம்சுமத்தி வருகிறது. சிறும்பான்மையின மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக அயோத்தி ராமர் கோவிலின் திறப்பு விழாவிற்கு கூட அவர்கள் செல்லவில்லை என பாஜக குற்றம்சாட்டி வருகிறது.

இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பாராபங்கியில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “ஜூன் 4 ஆம் தேதி என்பது வெகுதொலைவில் இல்லை. மோடி அரசு ஹாட்ரிக் சாதனை படைக்கப்போகிறது என்பதை நாடும் உலகமும் அறியும்.

சமாஜ்வாதி - காங்கிரஸ் கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்றால் அயோத்தி ராமர் ஆலயம் இல்லாமல் போய்விடும். ராமர் மீண்டும் கூடாரத்திற்கு சென்றுவிடுவார்” என தெரிவித்துள்ளார். அயோத்தி ராமர் கோவில் கட்டப்படுவதற்கு முன்பாக ராமர் சிலை கூடாரத்தில் வைக்கப்பட்டிருந்தது. அதேபோன்ற நிலைமை மீண்டும் ஏற்படும் என்றும் பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் பேசிய பிரதமர், “புல்டோசரை எங்கே, எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் எதிர்க்கட்சியினர் கற்றுக்கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.