முதலமைச்சர் பதவி பகிர்விற்கு பாஜக ஒப்புக்கொண்டால் மீண்டும் கூட்டணியை தொடர விரும்புவதாக சிவசேனா கட்சி வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 12-ஆம் தேதி முதல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும் அங்கு ஆட்சியமைக்க சிவசேனா கடுமையான முயற்சிகளை எடுத்து வருகிறது. இது தொடர்பாக காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. அதேசமயம் சிவசேனாவிற்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் முதலமைச்சர் பதவி பகிர்விற்கு பாஜக ஒப்புக் கொண்டால் பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைக்க சிவசேனா தயாராக உள்ளதாக அக்கட்சி வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சிவசேனா முன்னரே கேட்டதுபோல முதலமைச்சர் பதவியை சிவசேனா கட்சிக்கு இரண்டரை ஆண்டுகள் பகிர்ந்து அளித்தால், பாஜகவுடன் ஆட்சியமைக்க போவதாக சிவசேனா தரப்பில் முடிவு எடுக்கப்படும் எனத் தெரியவந்துள்ளது.
இதற்கிடையே தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் ஆட்சியமைப்பது தொடர்பாக பாஜக சார்பில் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தப் பட்டு வருவதாக தகவல் வெளியாகின. இதனை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் மறுத்துள்ளார். இந்தச் சூழலில் மீண்டும் பாஜக-சிவசேனாவும் இணைந்து ஆட்சியமைக்க போவாதாக வெளியாகியுள்ள தகவல் மகாராஷ்டிரா அரசியல் களத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.