சஜின் - பாவனா தம்பதி ட்விட்டர்
இந்தியா

கேரளா நிலச்சரிவு | பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் தானம் கொடுக்க முன்வந்த இளம்தாய்!

இடுக்கியை சேர்ந்த இளம் தாயொருவர், வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் தானமளிக்க முன்வந்திருக்கிறர். இச்சம்பவம் இணையத்தில் வைரலாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெ.நிவேதா

கேரளாவை சேர்ந்தவர் பாவனா என்ற இளம்தாய். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இடுக்கி மாவட்டத்தின் உப்புதாரா என்ற பகுதியை சேர்ந்தவர் இவர். இவரின் கணவர் சஜின் பராகரா என்பவர், நேற்று முன்தினம் தன் முகநூல் பக்கத்தில் ஒரு பதிவிட்டார். அதில், “பச்சிளம் குழந்தைகள் யாருக்கேனும் தாய்ப்பால் தேவைப்பட்டால், என்னை அனுகுங்கள். என் மனைவி அதற்கு தயராக இருக்கிறார்” என்று கூறியிருந்தார்.

சஜின் - பாவனா தம்பதி

இதுபற்றி கூறியுள்ள பாவனா, “வயநாடு துயரத்தை அறிந்தவுடனேயே, ‘இச்சம்பவத்தில் தாயை இழந்த பச்சிளம் குழந்தைகள் தாய்ப்பாலுக்கு என்ன செய்வார்கள்’ என்றுதான் நான் அதிகம் கவலை கொண்டேன். அதேபோல பெற்றோரை தவறவிட்ட குழந்தைகள் பற்றியும் எனக்கு அதிக கவலை. நானும் இரு குழந்தைகளுக்கு தாய்தான். அதனாலேயே அக்குழந்தைகளின் வேதனையை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. இதையெல்லாம் யோசித்தே தாய்ப்பால் வழங்க தன்னார்வலராக இயங்கலாமென என முடிவுசெய்தேன். இதுபற்றி என் கணவரிடம் ஆலோசித்தபோது, அவர் என் முடிவுக்கு முழு ஆதரவும் அளிப்பதாக எனக்கு கூறினார்” என்றுள்ளார்.

பாவனாவுக்கு, 4 வயதில் ஒரு குழந்தையும், 4 மாதங்களேயான ஒரு குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் சஜின் முகநூலில் பதிவிட்டவுடனேயே, அவருக்கு வயநாட்டில் இருந்து அழைப்பு வந்துள்ளது. இதனால் நேற்று முன்தினம் இரவே கணவனும் மனைவியும் புறப்ப்டடு சென்றுள்ளனர். நேற்று முழுவதும் பாவனா தாய்ப்பால் தானம் அளித்திருக்கிறார்.

தொடர்ந்து எத்தனை நாட்கள் தேவைப்படுகிறதோ, அத்தனை நாட்கள் அங்கேயே தங்கியிருக்க இருவரும் முடிவெடுத்துள்ளனராம். தற்போது இருவரும் வயநாட்டில் உள்ள மேப்படி முகாமில் உள்ளனர்.