ஐஏஎஸ் ராம் பிரசாத் மனோகர் pt web
இந்தியா

கர்நாடக மக்களின் தாகத்தை தணித்த தமிழர்.. உலக அளவில் கவனத்தை ஈர்க்கும் சூத்திரங்கள்.. யார் அவர்?

கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் திணறிய பெங்களூரு நகரம், தற்போது பெருமூச்சுவிட்டிருக்கிறது. சுமார் ஒன்றரை கோடி மக்கள் வசிக்கும் நகரத்தின் தாகம் தீர்ந்த பின்னணியில் இருப்பவர் ஒரு தமிழர். யார் அவர்?, அவரது பங்களிப்பு என்ன? விரிவாக பார்க்கலாம்.

PT WEB

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சில மாதங்களுக்கு முன்பு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. டேங்கர் லாரி மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரை வாங்க குடங்களுடன் மக்கள் அலைமோதிய காட்சிகளை காண முடிந்தது. இந்த சூழலில்தான் தமிழ் ஐஏஎஸ் அதிகாரி ராம் பிரசாத் மனோகர், பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டார். 1.4 கோடி மக்கள் வசிக்கும் பெங்களூரு நகரின் தாகத்தை தணிக்கும் மிகப்பெரிய சவால் அவர் முன் இருந்தது.

பெங்களூருவில் நிலையான நீர்நிலைகள் எதுவும் இல்லாததால், காவிரி நீரை முறையாக விநியோகிக்கும் வகையில் கவனம் செலுத்தியதாக ராம்பிரசாத் மனோகர் கூறினார். சுத்திகரிக்கப்பட்ட நீரை வறண்ட ஏரிகளில் நிரப்பியபோது, நிலத்தடி நீரின் மட்டம் உயர்ந்ததாகவும் தெரிவித்த அவர், ஏழை மக்களுக்கு நீர் கிடைப்பதை முதல் நோக்கமாக கொண்டு செயல்பட்டதாக குறிப்பிட்டார்.

பெங்களூரு தண்ணீர்ப் பிரச்னை பெரிய அளவில் கவனத்தை ஈர்த்ததைபோல், அதனை சரி செய்ததும் உலகளவில் கவனம் பெற்றதாக அவர் கூறியுள்ளார். தண்ணீர் பிரச்னையை போக்குவதற்கான தங்களின் ஐந்து சூத்திரங்களை ஐநா அமைப்பினர் கேட்டறிந்ததாகவும் தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ள நாடுகளில் அதனை செயல்படுத்த ஒப்பந்தம் போட்டுக்கொண்டதாகவும் ராம் பிரசாத் மனோகர் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி, அடுத்த மாதம் தங்கள் குழுவுக்கு கர்நாடக அரசு பாராட்டு விழா நடத்த இருப்பதாகவும் அவர் கூறினார். ஏழை, எளிய மக்களுக்கு உதவ முடியும் என்பதே, இந்தப் பணியில் கிடைக்கும் மனநிறைவு என்கிறார் அந்த தமிழ் ஐஏஎஸ் அதிகாரி.