இந்தியா

நிதியை தவறாக பயன்படுத்த ஒப்புதல் அளிக்காத ஐஏஎஸ் அதிகாரி இடமாற்றம்

நிதியை தவறாக பயன்படுத்த ஒப்புதல் அளிக்காத ஐஏஎஸ் அதிகாரி இடமாற்றம்

webteam

நிதியை தவறாக பயன்படுத்த ஒப்புதல் அளிக்காத ஐஏஎஸ் அதிகாரி ரோகினி சிந்தூரி பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

கர்நாடக மாநில பிரிவை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ரோகினி சிந்தூரி(35). இவர் கர்நாடகாவின் கட்டிட தொழிலாளர் அமைப்பின் செயலாளராக பணிபுரிந்து வந்தார். இந்தப் பதவியிலிருந்து அவர் தற்போது பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரின் திடீர் பணியிடை மாற்றத்திற்கான காரணமாக ‘டெக்கான் ஹெரால்ட்’  செய்தி வெளியிட்டுள்ளது. 

அதில், “ஐஏஎஸ் அதிகாரி ரோகினி சிந்தூரி ஊழியர்களின் வளர்ச்சிக்காக வைத்திருந்த நிதியை தவறாக பயன்படுத்த ஒப்புதல் அளிக்காத காரணத்தால் அவரை பணியிடை மாற்றம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் நலத் துறை கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் கட்டுபாட்டில் உள்ளது. இந்தத் துறையின் கீழ் வரும் கட்டிட தொழிலாளர் அமைப்பில் செயலாளராக ரோகினி இருந்த போது அவருக்கு சில நெருக்கடிகள் கொடுக்கப்பட்டுள்ளன. 

(ரோகினி சிந்தூரி)

அதாவது ஒரு சில ஒப்பந்தங்களை கர்நாடக மாநில மின்சார வளர்ச்சி வாரியத்திற்கு டேண்டர் இல்லாமல் தரும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. எனினும் ரோகினி அதற்கு மறுப்பு தெரிவித்து டெண்டர் முறை மூலம் ஒப்பந்தத்தை வேறு நிறுவனத்திற்கு வழங்கியுள்ளார்.  அத்துடன் இந்த அமைப்பின் நிதியை கர்நாடக மாநில வெள்ள நிவாரண நிதிக்கு அனுப்பவும் ரோகினி வலியுறுத்தப்பட்டுள்ளார். இதற்கும் அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்தச் சூழலில் ரோகினி பதவியிலிருந்து மாற்றப்பட்டுள்ளார். ஏற்கெனவே இவர் கர்நாடக மாநிலத்தின் ஹசன் மாவட்டத்தில் மாநகராட்சி ஆணையராக இருந்தப் போது அமைச்சர்கள் மஞ்சு மற்றும் ஹெச்.டி.ரேவ்வன்னா ஆகியோர் கூறியதை ஏற்க மறுத்துள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.