உத்தரப்பிரதேசம் ஆட்சியர் அதிரடி சோதனை முகநூல்
இந்தியா

உத்தரப்பிரதேசம் - நோயாளி போல வேடமணிந்து வந்த ஐஏஎஸ் அதிகாரி... ஆட்டம் கண்ட மருத்துவமனை!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இயங்கிவரும் அரசு சுகாதார நிலையம் ஒன்றுகுறித்து தொடர்ந்து பல புகார்கள் வந்த நிலையில் மருத்துவமனைக்கு சென்று அதிரடி சோதனை நடத்திய ஆட்சியருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன.

ஜெனிட்டா ரோஸ்லின்

உத்தரப்பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் பகுதியில் அரசு சுகாதார நிலையம் ஒன்று இயங்கி வந்துள்ளது. இங்கு மருத்துவர்கள் அலட்சியமாக இருப்பது போன்ற புகார்கள் தொடர்ந்து எழுந்துள்ளன.

தொடர் புகாரின் காரணமாக, மருத்துவமனைக்கு நோயாளி போல அம்மாவட்ட ஆட்சியர் கிருதி ராஜ் சென்றுள்ளார். இதன்மூலம் காலை 10 மணி மேல் ஆகியும் மருத்துவர்கள் முறையாக வருகை தராதது, நோயாளிக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படாதது, காலாவதியான மருந்துகள் அளிக்கப்படுவது போன்ற பல குற்றங்கள் கண்டறியப்பட்டதுள்ளன.

இதுபற்றி ஐஏஎஸ் அதிகாரி கிருதி ராஜ் தெரிவிக்கையில், “நாய்க்கடிக்கு ஊசி போடுவதற்கு மருத்துவமனைக்கு நோயாளி ஒருவர் சென்ற போது காலை 10 மணிக்கு மேல் ஆகியும் மருத்துவர்கள் வரவில்லை என புகார் வந்தது. இதன் அடிப்படையில், இதுகுறித்து உறுதி செய்ய டாக்டரிடம் அப்பாய்ண்மண்ட் போட்டு கொண்டு, முக்காடு அணிந்தபடி நானே மருத்துவமனைக்கு சென்றேன்.

அப்போது மருத்துவரின் நடத்தை ஏற்புடையதாக இல்லை. மேலும் அவர்களின் வருகைப்பதிவேட்டை சரிபார்த்தபோது அவர்களில் சிலர் மருத்துவமனைக்கு சரியாக வருகை தராதது தெரியவந்தது. வருகை பதிவேட்டில் சிலரின் கையெழுத்து இடப்பட்டிருந்தாலும் சுகாதார நிலையத்தின் உள்ளே அவர்கள் இல்லை.

அதிலும் மருந்துகளை சோதித்த போது அதில் பாதி காலாவதியாகிவிட்டன. சுகாதார மையத்தில் சரியான சுகாதாரம் பராமரிக்கப்படவில்லை. ஊசி கூட சரியாக செலுத்தப்படவில்லை என்பது தெரியவந்தது. மேலும் அங்கே இருக்கும் ஊழியர்கள் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பணியாற்றவே இல்லை. இதுகுறித்து நாங்கள் மேலும் விசாரணை நடத்தவுள்ளோம். இது அனைத்தையும் கவனத்தில் கொண்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

ஆட்சியரின் இந்த அதிரடி வருகையால் மருத்துவமனை நிர்வாகம் பீதியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.