இந்தியா

ஐஏஎஸ் விதிகளில் திருத்தம்: எதிர்ப்பு கிளம்புவது ஏன்? திருத்தம் செய்ய அவசியம் ஏன்?

ஐஏஎஸ் விதிகளில் திருத்தம்: எதிர்ப்பு கிளம்புவது ஏன்? திருத்தம் செய்ய அவசியம் ஏன்?

JustinDurai

இந்தப் புதிய திருத்தம் மாநில அரசின் உரிமைக்கு எதிரானது; இதனால் அதிகாரிகள் அச்சத்துடன் பணியாற்றும் சூழலுக்குத் தள்ளப்படுவர்’ என்பது எதிர்ப்பு தெரிவிக்கும் மாநிலங்களின் கருத்தாக உள்ளது.

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளுக்கான பணி விதிகள் 1954 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டன. மாநில அரசுகளின் கீழ் பணியாற்றும் இந்த அதிகாரிகளை மத்திய அரசுப் பணிகளுக்கு மாற்றம் செய்ய முடிவெடுத்தால் மாநில அரசின் ஒப்புதலோடு அதைச் செய்து கொள்ளலாம் என இந்திய ஆட்சிப் பணி 1954 விதி-6இல் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை அதுவே நடைமுறையில் உள்ளது.

இந்த நிலையில் மாநில அரசின் அனுமதியோ அல்லது ஒப்புதலோ இல்லாமலேயே அதிகாரிகளை மாற்றம் செய்ய மத்திய அரசுக்கு முழு அதிகாரம் வழங்கும் வகையில் விதி-6 இல் திருத்தம் செய்யும் வரைவு விதிகளை மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை கடந்த டிசம்பர் மாதம் தயாரித்தது. இது தொடர்பாக வரும் 25-ஆம் தேதிக்குள் கருத்து தெரிவிக்க அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. இதற்கு மேற்கு வங்கம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

‘இந்தப் புதிய திருத்தம் மாநில அரசின் உரிமைக்கு எதிரானது; இதனால் அதிகாரிகள் அச்சத்துடன் பணியாற்றும் சூழலுக்குத் தள்ளப்படுவர்’ என்பது எதிர்ப்பு தெரிவிக்கும் மாநிலங்களின் கருத்தாக உள்ளது. இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஐஏஎஸ் விதிகளைத் திருத்தும் முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யாவிட்டால், ஜனநாயகத்தைக் காப்பதற்காகப் பெரும் போராட்டத்தில் ஈடுபட நேரிடும்’ என எச்சரித்துள்ளார்.

இந்நிலையில், இந்த விதிமுறை மாற்றம் தொடர்பாக மத்திய அரசு தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், ‘’மத்திய பணிக்கு அனுப்பப்படும் ஐஏஎஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை கடந்த 2011-இல் 309-ஆக இருந்தது. தற்போது 223-ஆக குறைந்துள்ளது. அதாவது 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைந்துள்ளது. மாநில அரசுகள் போதிய எண்ணிக்கையிலான ஐஏஎஸ் அதிகாரிகளை மத்திய பணிக்கு அனுப்பாத காரணத்தால், மத்திய பணியில் ஐஏஎஸ் அதிகாரிகளின் பிரதிநிதித்துவம் வெகுவாக குறைந்துள்ளது. அதிகாரிகள் பற்றாக்குறை காரணமாக மத்திய அரசின் செயல்பாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும், மாநில அரசிடம் பணியாற்றியதன் மூலம் மிகுந்த கள அனுபவம் பெற்றிருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் மத்திய அரசு பணிக்கு மாற்றப்படுவது மத்திய, மாநில இரு அரசுகளுக்கும் நன்மை தரும். இதன் காரணமாகவே ஐஏஎஸ் விதியில் மாற்றம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய விதியின்படி, ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றுவது தொடர்பாக குறிப்பிட்ட கால அவகாசத்தில் மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும், இல்லாவிட்டால் அவகாசம் முடிந்ததும் சம்மந்தப்பட்ட அதிகாரி தாமாக மத்திய அரசுப பணிக்கு மாற்றப்படுவார்.

இதுகுறித்து திமுக செய்தித்தொடர்பாளர் சிவ ஜெயராஜ் கூறுகையில், ‘’மாநில சுயாட்சியை பறிக்கும் நடவடிக்கைதான் இது. மாநிலங்களை எந்த அதிகாரமும் இல்லாமல் மாநகராட்சியாக மாற்றுவதற்கான ஒரு வாய்ப்பாக இதனை பயன்படுத்த நினைக்கிறது மத்திய பாஜக அரசு. மாநில அரசிடம் இருக்கக்கூடிய கொஞ்சம் அதிகாரங்களையும் பறித்துவிட்டால் மத்திய அரசின் கைப்பாவையாக மாநில அரசை மாற்றிவிட முடியும் என நினைக்கிறார்கள்.

இந்த புதிய திருத்தத்தால் பிரதமர் அலுவலகத்தின் அதிகாரிகள், மத்திய உள்துறை அலுவலகத்தின் அதிகாரிகள் நேரடியாக மாநில நிர்வாகத்தில் தலையிட்டு அதிகாரிகளுக்கு குடைச்சல் கொடுக்கும் போக்கு உருவாகக்கூடும். மாநில அரசு அறிவிக்கும் நலத்திட்டப் பணிகள் அதிகாரிகள் வழியாகத்தான் மக்களை சென்றடையும். அவ்வாறிருக்க, மத்திய அரசின் தலையிட்டால் அதிகாரிகள் அச்சத்துடன் பணியாற்றும் சூழல் உருவாகும். இதனால் நலத்திடப் பணிகள் மக்களை சென்றடைவதில் சிக்கல் உருவாகக்கூடும். மத்தியில் இருக்கும் கட்சியின் கொள்கைகளை அதிகாரிகள் மூலமாக திணிக்கும் வாய்ப்பு உருவாகும். அடிப்படை அரசியலமைப்பு சட்டத்தையே கேள்விக்குள்ளாக்கும் நடவடிக்கை இது. இந்த புதிய திருத்தத்தை திமுக கடுமையாக எதிர்க்கிறது. இவ்விவாகரம் தொடர்பாக திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவார்கள்’’ என்கிறார் அவர்.

பாஜக செய்தித்தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறுகையில், ‘’இந்திய ஆட்சிப்பணி என்பது இந்திய அரசாங்கத்தை நிர்வகிக்கக் கூடிய அதிகாரிகளை இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் பணியாற்ற நியமிப்பது ஆகும். இப்போது கொண்டு வரக்கூடிய திருத்தத்தின் மூலம் ஐஏஎஸ் அதிகாரிகளை மத்திய அரசு தன்னுடைய நிர்வாகத்தை செம்மைப்பைடுத்துவதற்காக எப்போது வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளலாம் என்பதை உறுதிப்படுத்துகிறது. இது முழுக்க முழுக்க மத்திய அரசின் நிர்வாக காரணத்திற்காக மட்டுமே திருத்தப்படுகின்றன. இதில் அரசியல் உள்நோக்கம் எதுவுமில்லை. மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்படுவது என்கிற எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை’’ என்கிறார் அவர்.