ias, ips officers x page
இந்தியா

IAS போலிச் சான்றிதழ் விவகாரம்| புனே பெண் அதிகாரியைத் தொடர்ந்து மேலும் பலர் மீது குவியும் புகார்கள்!

போலிச் சான்றிதழ்கள் மூலம் இடஒதுக்கீட்டைப் பயன்படுத்தி இன்னும் சிலர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணியிடங்களைப் பெற்றிருப்பதாக இணையத்தில் செய்திகள் வைரலாகி வருகின்றன.

Prakash J

பயிற்சி ஐ.ஏ.எஸ். பெண் அதிகாரியின் மீது தொடரப்பட்ட குற்றச்சாட்டுகள்

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் பயிற்சி பெண் ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றிய பூஜா கேட்கர், காரில் சைரன் பொருத்தியது, கூடுதல் ஆட்சியரின் அறையைப் பயன்படுத்தியது என தனது அதிகாரத்துக்கு மீறிய சில நடைமுறைகளைச் செய்துகொண்டதாகவும், போலி மாற்றுத் திறனாளி சான்றிதழ்களைச் சமர்ப்பித்தது, சாதி இடஒதுக்கீட்டிலும் வருமானத்தை குறைத்து காட்டி அதற்கான சலுகைகளைப் பெற்றதாகவும் புகார்கள் எழுந்தன. இதையடுத்து அவர், தற்போது வேறு இடத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து அவர் பற்றிய விவரங்களைச் சேகரித்து மத்திய, மாநில அரசுகள் விசாரணை நடத்திவருகின்றன.

விசாரணையில், அவர் செய்தது தவறு என கண்டறியப்பட்டால், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் பயன்படுத்தி வந்த கார் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே பூஜா கேட்கரின் தாய் மனோரமா கேட்கர், விவசாயி ஒருவரின் நிலத்தை ஆக்கிரமிக்க முயன்றபோது அவ்விவசாயியை துப்பாக்கி காட்டி மிரட்டியதாக சர்ச்சையில் சிக்கினார். இந்த வழக்கில் பூஜாவின் பெற்றோர் தலைமறைவாகியுள்ளனர். அவர்களைப் பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

அபிஷேக் சிங் என்ற முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி மீதும் மோசடிப் புகார்

இந்த நிலையில், பூஜா கேட்கரைப்போலவே போலி மாற்றுத்திறனாளி சான்றிதழ்களைச் சமர்ப்பித்து சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணிக்குச் சேர்ந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த அபிஷேக் சிங் என்ற முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரியும் மோசடி செய்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

2011-ஆம் ஆண்டு யு.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்று ஐ.ஏ.எஸ்.அதிகாரியாக பணியில் சேர்ந்த அபிஷேக் சிங், நடிகராக வேண்டும் என்ற ஆசையில் தனது பதவியை கடந்த ஆண்டு ராஜினாமா செய்துவிட்டார். ஆனால், அவர் மாற்றுத்திறனாளி சலுகையில் வேலையில் சேர்ந்ததாக இப்போது புகார் எழுந்துள்ளது. பார்வைக்குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி என்று கூறி யு.பி.எஸ்.சி தேர்வில் அவர் மோசடி செய்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மோசடி குறித்து அபிஷேக் சிங் விளக்கம்

இதுகுறித்து அபிஷேக் சிங், ''நான் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு கொடுப்பதால் என்மீது இதுபோன்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. இடஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள் இப்புகார்களை முன்வைக்கின்றனர். எனது வேலை, எனது சாதி குறித்து கேள்வி எழுப்புகிறார்கள். எனது கடின உழைப்பால் தேர்வில் என்னால் சாதிக்க முடிந்தது.

இடஒதுக்கீட்டால் இப்பணிக்கு வரவில்லை. என் மீதான விமர்சனம் என்னை எந்தவிதத்திலும் பாதிக்கப்போவதில்லை. இதுபோன்ற விமர்சனங்களை முதல்முறையாக எதிர்கொள்கிறேன். நான் மக்கள்தொகை அடிப்படையில் அரசு வேலையில் இடஒதுக்கீடு கொடுக்கப்படவேண்டும் என்ற கொள்கையுடையவன். அதற்காக பாடுபடுவேன்” என தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

போலிச் சான்றிதழ்கள் கொடுத்து பதவியில் சேர்ந்ததாக வைரலாகும் இணையதளப் பதிவு!

இவர்களைத் தவிர, போலிச் சான்றிதழ்கள் மூலம் இடஒதுக்கீட்டைப் பயன்படுத்தி இன்னும் சிலர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணியிடங்களைப் பெற்றிருப்பதாக இணையத்தில் செய்திகள் வைரலாகி வருகின்றன. அதில் ஆசிஃப் கே.யூசுப், பிரியன்ஹு காதி, அனு பெனிவால், நிகிதா கண்டேல்வால் ஆகியோரது பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

இதில், 2020ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான ஆசிஃப் கே யூசுப், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான (ஈடபிள்யூஎஸ்) இடஒதுக்கீட்டில், போலிச் சான்றிதழ் அளித்து ஐஏஎஸ் ஆகியுள்ளார். ஆனால், இவர் சமர்பித்த ஓபிசி என்சிஎல் (OBC NCL) சான்றிதழ் போலியானது என்று விசாரணையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: வீரமரணம்அடைந்த கேப்டன்|கோரிக்கை வைத்த பெற்றோர்..மவுனம் காக்கும் மனைவி..பங்கு பிரிக்கப்பட்டது எப்படி?

அதுபோல், 2021 ஆம் ஆண்டு எலும்பியல் குறைபாடு - ஆர்த்தோ ஹேண்டிகேப் - ஒதுக்கீட்டில் ஐஏஎஸ் அதிகாரியான பிரியன்ஹு காதியை, நேரில் கண்டுள்ள பலரும் அவருக்கு எவ்வித குறைபாடுகளும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். அடுத்து, 2021ஆம் ஆண்டில் ஈடபிள்யூஎஸ் இடஒதுக்கீட்டில் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்ட அனு பெனிவாலின் தேர்வும் முரணாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து, 2014 ஆம் ஆண்டு பார்வை குறைபாடு ஒதுக்கீட்டில் ஐஏஎஸ் அதிகாரியான நிகிதா கண்டேல்வாலின் தேர்வும் விமர்சிக்கப்படுகிறது. கண்ணாடி அணியாமல் அவர் ஓட்டுநர் உரிம தேர்வில் பங்கேற்ற வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. ஐ.ஏ.ஏஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் போலிச் சான்றிதழ்கள் கொடுத்து பணிக்குச் சேர்ந்ததாகக் கூறப்படும் விவகாரம் நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.