இந்தியா

இந்திய விமானப் படையின் 'முதல் பெண் தளபதி': மகளிர் தினத்தன்று பெண்களின் Icon-ஆன ஷாலிசா தாமி

இந்திய விமானப் படையின் 'முதல் பெண் தளபதி': மகளிர் தினத்தன்று பெண்களின் Icon-ஆன ஷாலிசா தாமி

JananiGovindhan

உலகம் முழுவதும் இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. உலகம் நவீன மயத்தை நோக்கி நடைபோட்டுக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், எந்தவொரு துறையும் பெண்களின் பங்கு இல்லாமல் இயங்குவதே இல்லை. தரையில் ஓடுவது முதல் வானில் பறப்பது வரை பெண்கள் தங்களை தொடர்ந்து நிலைநிறுத்திக் கொண்டே இருக்கிறார்கள், நிரூபித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

இந்த நிலையில்தான் இந்திய விமானப் படையில் தாக்குதல் பிரிவுக்கான தளபதியாக பெண் அதிகாரியொருவர் முதல் முறையாக நியமிக்கப்பட்டிருக்கிறார். அந்தவகையில், விமானப்படையின் மேற்கு பிரிவின் முன்னணி போர் பிரிவுக்கு தலைமைப் பொறுப்புக்காக ஷாலிசா தாமி என்ற பெண் அதிகாரி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

விமானப்படையின் முதல் பெண் விமான ஓட்டி பயிற்சியாளர் என்ற பெருமையையும் பெற்றிருக்கும் இந்த ஷாலிசா தாமி, 2003ம் ஆண்டு ஹெலிகாப்டர் விமானியாக இந்திய விமானப் படையில் பணிக்கு சேர்ந்தவர். கிட்டத்தட்ட 2,800 மணி நேரம் பற்பல விமானங்களில் வானில் பறந்த அனுபவத்தை கொண்டவராவார் இவர்.

பஞ்சாப்பின் லூதியானாவைச் சேர்ந்த கேப்டன் ஷாலிசா தாமி, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொடர்பு படிப்பில் இளங்கலை பட்டம் பெற்றவர். இந்திய விமானப் படையில் ஒரு குழுவுக்கு தளபதியாக இருப்பது ராணுவத்தில் கர்னலாக இருப்பவருக்கு நிகரான பதவியாகும்.

இரண்டு முறை விமானப் படை தலைமை தளபதியால் பாராட்டப்பட்ட ஷாலிசா தற்போது 50க்கும் மேற்பட்டோரின் செயல்பாட்டு பகுதி பிரிவிக்கு தலைமைத் தாங்கி கட்டளையிடும் அந்தஸ்தை பெற்றிருக்கிறார்.

முன்னதாக கடந்த 2016ம் ஆண்டு முதல் இந்திய விமானப் படையில் முக்கிய போர் விமானங்களுக்கு பெண் விமானிகள் நியமிக்கப்பட்டு வந்ததில் இதுவரையில், 1,875 பெண் அதிகாரிகள் விமானப் படையில் பணியாற்றுகின்றனர். இந்த நிலையில்தான் விமானப்படை வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவர் ஒரு குழுவுக்கான தளபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த மகளிர் தின நாளில் இந்திய பெண்கள் ஒவ்வொருவருக்கும் பெருமையளிக்கக் கூடிய அறிவிப்பாகவே ஷாலிசாவின் நியமனம் இருக்கக் கூடும்.