இந்தியா

"பல்லை உடைத்து விடுவேன்" - போலீஸ் அதிகாரியை மிரட்டிய காங்கிரஸ் எம்எல்சி

ஜா. ஜாக்சன் சிங்

கர்நாடகாவில் காவல் உயரதிகாரியை பார்த்து பல்லை உடைத்து விடுவேன் என காங்கிரஸ் எம்எல்சி ஒருவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலத்தின் சட்ட மேலவையில் காலியாக இருக்கும் இடங்களுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில் பெலகாவியில் உள்ள வடமேற்கு டீச்சர்ஸ் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பிரகாஷ் ஹக்கேரியும், பாஜக சார்பில் அருண் ஷாஹாபூரும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று மாலை எண்ணப்பட்டன. முடிவில், காங்கிரஸின் பிரகாஷ் ஹக்கேரி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். முன்னதாக, வாக்கு எண்ணும் இடத்துக்கு பிரகாஷ் ஹக்கேரியும், பெலகாவி காங்கிரஸ் எம்எல்ஏவான லட்சுமி ஹெபால்கரும் சென்றனர்.

இந்நிலையில், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெலகாவி காவல் உதவி ஆணையர் சதாசிவ் கட்டிமானி, எம்எல்ஏ லட்சுமி ஹெபால்கரை தடுத்து நிறுத்தி, இந்த வழியாக செல்ல வேண்டாம் எனக் கூறினார். இதையடுத்து, அவரது ஆதரவாளர்கள் உதவி ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த எம்எல்சி பிரகாஷ் ஹக்கேரி, உதவி ஆணையர் சதாசிவ் கட்டிமானியை பார்த்து, 'உன் பல்லை உடைத்து விடுவேன்' எனக் கூறியவாறே அவரை கடந்து சென்றார். இந்தக் காட்சியை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். தற்போது அது வைரலாக பரவி வருகிறது.

காவல் உயரதிகாரியை மிரட்டிய காங்கிரஸ் எம்எல்சி பிரகாஷ் ஹக்ரேரியை பதவி நீக்கம் செய்யக் கோரி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.