இந்தியா

சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்குள்ளான பிரதமர் மோடியின் கருத்து

webteam

பாலகோட் தாக்குதலுக்கு உத்தரவிட்டது தொடர்பாக பிரதமர் மோடி கூறிய கருத்துகள் சமூக வலைதளங்களில் கடும் எதிர்வினைகளை பெற்றன

தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பேசிய பிரதமர் மோடி, பாலகோட் தாக்குதல் நடந்த அன்று வானிலை மோசமாக இருந்ததாகவும், மழை அதிகம் பெய்ததால் தாக்குதலை வேறு நாளில் நடத்தலாம் என சில அதிகாரிகள் எண்ணியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் நான் இது தொடர்பான அறிவியல் தொழில்நுட்பம் தெரிந்த நபர் இல்லை. ஆனாலும்  வானில் மேகக் கூட்டங்கள் அதிகம் இருப்பதால் அவை நமது விமானங்களை எதிரிகளின் ரேடாரில் சிக்காமல் காக்க உதவும் என நினைத்தேன். அதன் அடிப்படையில் தான் தாக்குதலை அன்றே நடத்தப் பணித்தேன் என குறிப்பிட்டுள்ளார்.

மோடி பேசிய இந்த வீடியோவை ட்வீட்டாகவும் வெளியிட்டிருந்தது பாரதிய ஜனதா கட்சியின் குஜராத் மாநிலப் பிரிவு. இந்த ட்வீட்டிற்கு பலரும் கடும் எதிர்வினைகளை முன்வைத்தனர். இதனை அடுத்து ட்வீட்டை பாரதிய ஜனதா கட்சி நீக்கியது

மோடியின் இந்த கருத்துக்கு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பலரும் எதிர்க்கருத்து தெரிவித்து வருகின்றனர். இது குறித்து பேசியுள்ள காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சல்மான் சோஸ், ''இது நகைச்சுவை இல்லை. நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயம். ரேடார் தொழில்நுட்பம் குறித்து பிரதமருக்கு யாருமே விளக்கமளிக்கவில்லை என தெளிவாக தெரிகிறது'' என்று தெரிவித்துள்ளார்.


'
இது குறித்து டெலகிராப் பத்திரிகைக்கு கருத்து தெரிவித்த விமானி ஒருவர், மேகக்கூட்டங்கள் கூடியிருந்தாலும் விமானங்கள் ரேடாரில் சிக்கும் என தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி பேசிய அந்த குறிப்பிட்ட வீடியோவை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து தங்கள் எதிர்வினைகளை பதிவு செய்து வருகின்றனர்