பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் இடம்பெற்று இருந்ததற்கு நன்றி தெரிவித்து ஷமிகா ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவிலிருந்து ஷமிகா ரவி நேற்று நீக்கப்பட்டார். புதிதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ள பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் ரத்தின் ராய் மற்றும் ஷமிகா ரவி இடம்பெறவில்லை. ஷமிகா நீக்கப்பட்டுள்ளதை அடுத்து சஜ்ஜித் சினாய் பகுதி நேர உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் இதுகுறித்து ஷமிகா ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் என்னை பணியாற்ற வைத்ததற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பதவி எனக்கு பல விஷயங்களை கற்றுக் கொள்ளும் அனுபவமாகமாக அமைந்தது. அத்துடன் இந்தப் பதவியில் பணியாற்றியது எனக்கு மிகவும் பெருமையாகவும் இருந்தது. நான் எப்போதும் இந்தியாவின் வளர்ச்சி சார்ந்த விஷயங்களுக்கு துணை நிற்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஷமிகா பொருளாதார மந்தநிலை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அதில் நாட்டின் பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது என்று வெளிப்படையாக தெரிவித்தார். இதற்கு பின்பு இ-சிகரெட்டிற்கு மத்திய அரசு தடை விதித்தது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஷமிகா ரவி கருத்து தெரிவித்தார். இவ்வாறு வெளிப்படையாக கருத்துகளை தெரிவித்து வந்ததால் இவர் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று தகவல் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.