முடா எனப்படும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் வழங்கப்பட்ட நிலத்தில் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, 14 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டன. இதில் முறைகேடு நடந்திருப்பதாக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தன.
இந்த விவகாரத்தில் சித்தராமையாவிடம் விளக்கம் கேட்டு ஆளுநர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இந்த நிலையில் சித்தராமையா மீது விசாரணை நடத்த ஆளுநர் தற்போது ஒப்புதல் அளித்துள்ளார்.
இதையடுத்து, சித்தராமையா தனது இல்லத்தில், தலைமைச் செயலாளர் ஷாலினி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தை அணுக சித்தராமையா திட்டமிட்டுள்ளார்.
இதுகுறித்து கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் பரமேஷ்வரா, ”மேலிடத்தில் இருந்து ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது. தற்போது அது நிரூபணம் ஆகியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சித்தராமையா, “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்க்க இது ஒரு பெரிய சதி. டெல்லி, ஜார்க்கண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் பாஜகவினர் இதைச் செய்துள்ளனர். கர்நாடகத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை சீர்குலைக்க சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
இந்த சதியில் மத்திய அரசும், பாஜக, ஜேடி(எஸ்) உள்ளிட்ட கட்சிகளும் ஈடுபட்டுள்ளன. காங்கிரஸ் தலைமை என்னுடன் உள்ளது. முழு அமைச்சரவையும், அரசாங்கமும் என்னுடன் உள்ளது.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் என்னுடன் இருக்கின்றனர். நான் எந்த தவறும் செய்யவில்லை என்பதால் ராஜினாமா செய்ய தேவையில்லை” என்றார்.