இந்தியா

“நான் ஒரு உயர் அதிகாரி பொய் சொல்ல மாட்டேன்”- ரஃபேல் சர்ச்சை குறித்து விளக்கம்

Rasus

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் தாங்கள் தான் ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்தோம் என டஸால்ட் நிறுவன முதன்மை செயல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் சேர்க்கப்பட்டது தொடர்பாக சர்ச்சை எழுந்தது. மத்தியில் ஆளும் பாஜக அரசின் அழுத்தமே இதற்கு காரணம் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ரிலையன்ஸ் நிறுவனம் ரஃபேல் ஒப்பந்தத்தில் இடம்பெற வேண்டும் என இந்திய அரசு வலியுறுத்தியதாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிரான்சிஸ் ஹாலண்டேவும் தெரிவித்து இருந்தார். ஹாலண்டேவின் கருத்துக்குப் பின்னர் இந்த விவகாரம் அதிகமாகவே சூடுபிடித்தது. இதனை பாஜக தலைமையிலான மத்திய அரசு மறுத்தது. ரிலையன்ஸ் நிறுவனம் இந்திய பங்குதாரராக சேர்க்கப்பட்டதற்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் தாங்கள் தான் ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்தோம் என டஸால்ட் நிறுவன முதன்மை செயல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ள டஸால்ட் நிறுவன முதன்மை செயல் அதிகாரி எரிக் டிராப்பியர் தாங்கள்தான் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்ததாக கூறியுள்ளார்.

எந்த ஒரு கட்சிக்காகவும் தாங்கள் பணியாற்றவில்லை எனக் கூறியுள்ள டஸால்ட் நிறுவன முதன்மை செயல் அதிகாரி, நேரு பிரதமராக இருந்த போது 1953-ஆம் ஆண்டிலேயே இந்தியாவுடன் தங்கள் நிறுவனம் ஒப்பந்தம் செய்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விஷயத்தில் தான் பொய் கூறவில்லை என்றும் ஒரு நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக இருக்கும் தான் பொய் கூற மாட்டேன் எனவும் எரிக் டிராப்பியர் தெரிவித்துள்ளார்.