குஜராத் சட்டசபை தேர்தல் நெருங்கி உள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடியைப் போல் நள்ளிரவில் திடீரென சந்திப்பு நிகழ்த்தமாட்டேன் என பட்டேல் அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் ஹர்திக் பட்டேல் தெரிவித்துள்ளார்.
குஜராத் சட்டசபையின் பதவிக்காலம் அடுத்தாண்டு ஜனவரி மாதத்துடன் நிறைவடைய உள்ளது. இதனால், தேர்தல் பணிகளில் அனைத்து கட்சிகளுக்கும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க இடையே இங்கு நேரடி போட்டி உள்ளது. பாஜகவுக்கு எதிராக அம்மாநிலத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ள நிலையில் தோல்வியை தவிர்க்க அந்த கட்சி பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. அதேபோல், காங்கிரஸ் கட்சியும் பாஜக எதிர்ப்பு சக்திகளை தனது பக்கம் இணைத்துக் கொள்ள முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே, தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி மற்றும் ஹர்திக் பட்டேல் ஆகியோரை சந்திக்க காங்கிரஸ் கட்சி தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதற்காக ஹர்திக் பட்டேல் தலைநகரில் முகாமிட்டுள்ளார். ராகுல்காந்தியை ஹர்திக் பட்டேல் ரகசியமாக சந்தித்ததாக கூறி பாஜக தரப்பில் வீடியோக்கள் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஹர்திக், “நான் ஹோட்டலில் தங்கிருந்த வீடியோக்களை எடுத்து பாஜக வெளியிட்டுள்ளது. நான் ராகுல்காந்தியை இன்னும் சந்திக்கவில்லை. அப்படி சந்தித்தால் ஊடகங்களில் தெரிவிப்பேன். நான் மோடியைப் போல், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை நள்ளிரவில் சந்திக்கவில்லை” என்று தெரிவித்தார்.
இதனிடையே நேற்று நிகழ்ச்சிகளில் பேசிய ஹர்திக், காங்கிரஸ் ஒரு திருடன், பாஜக சூப்பர் திருடன் என்று விமர்சித்தார். இருப்பினும், பா.ஜ.க.வை வீழ்த்த காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாக ஹர்திக் பட்டேல் தெரிவித்துள்ளார்.