இந்தியா

கேரளாவை அதிரவைத்த மட்டன் சூப் மர்டர் : உண்மையை ஒப்புக்கொண்ட கொலையாளி!

கேரளாவை அதிரவைத்த மட்டன் சூப் மர்டர் : உண்மையை ஒப்புக்கொண்ட கொலையாளி!

webteam

கேரளாவில் 14 ஆண்டுகளில் தனது குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரை மட்டன் சூப்பில் சயனைடு கலந்து கொடுத்து பெண் கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தானே 6 கொலைகளையும் செய்ததாக அப்பெண் ஒப்புக்கொண்டுள்ளார்.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கூடத்தாயி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஜூலி தாமஸ். பெற்றோரின் கட்டாயத்தின் பேரில் ராய் தாமஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஜுலி. மணவாழ்க்கை கசப்பாக இருந்ததால் மனதிற்குள் மருகிக் கொண்டிருந்த ஜூலிக்கு மாமனாரின் அண்ணன் மகன் சாஜுவை பிடித்திருந்தது. அவருக்கும் அதே எண்ணம் இருப்பதை அறிந்த ஜூலி இருவரும் இணைவதற்கு தடையாக இருக்கும் குடும்பத்தை என்ன செய்வதென்று யோசித்தனர். கூண்டோடு குடும்பத்தினரின் கதையை முடித்துவிடலாம் என முடிவெடுத்தவர். அதற்காக நகைப்பட்டறையில் பணிபுரியும் தனது நண்பர் சாஜுவிடம் இருந்து சயனைடை வாங்கியுள்ளார். ஜுலி குடும்பத்தில் உள்ளவர்கள் இரவு உணவுக்குப்பின் சூப் சாப்பிடுவது வழக்கம். அதைப் பயன்படுத்தி அனைவரையும் கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார் அவர். ஒரே நேரத்தில் எல்லோரையும் கொலை செய்துவிட்டால் தன்மீது சந்தேகம் வரும் என்பதால் சிறிது கால இடைவெளியில் திட்டத்தை அரங்கேற்ற முடிவு செய்துள்ளார். 

யாருக்கும் சந்தேகம் ஏற்படாமல் இருந்தால்தான் சொத்துகளை தமது பெயருக்கு மாற்ற முடியும் என்பதும் அதற்கு ஒரு காரணம். முதலில் மாமியார் அன்னம்மாவுக்கு 2002ஆம் ஆண்டு மட்டன் சூப்பில் சயனைடை கலந்து அவருக்கு கொடுத்துள்ளார். அதை குடித்ததும் வாந்தி எடுத்த அன்னம்மா சிறிது நேரத்தில் உயிரிழந்தார். 2008ஆம் ஆண்டு மாமனார் டாம் தாமஸையும் 2011ஆம் ஆண்டு கணவர் ராய் தாமஸையும் அதே பாணியில் கொலை செய்துள்ளார் ஜூலி. திட்டமிட்டபடி எல்லாம் நடந்து கொண்டிருந்த போது அன்னம்மாவின் சகோதரர் மேத்யூவுக்கு ஜுலியின் நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்த அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

ஜூலி 2014ஆம் ஆண்டு மேத்யூவுக்கும் சயனைடு மட்டன் சூப் கொடுக்க பிரச்னை முடிந்தது. தன்வீட்டில் அனைவரையும் கொலை செய்தபின் ஜூலியின் கவனம் சாஜுவின் மனைவி சிலி மற்றும் அவரது 10 மாத பெண் குழந்தையின் மீது திரும்பியது. 2016-ல் அவர்களுக்கும் சயனைடு கலந்த சூப் கொடுத்தபின் 2017ஆம் ஆண்டு ஜூலியும் சாஜுவும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். குடும்பத்தினரின் சொத்துகளை தன் பெயருக்கு மாற்றிக்கொண்டுள்ளார் ஜூலி. 

இனி சயனைடு சூப் தேவைப்படாது என எண்ணியிருந்த போது, சாஜூவின் மனைவி இறந்து ஒராண்டுக் கூட முடியாத நிலையில் சாஜூவும், ஜூலியும் திருமணம் செய்தது உறவினர்கள் பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவரது முதல் கணவர் ராய் தாமஸின் சகோதரர் தனது குடும்பத்தினரின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தார். அவர் வெளிநாட்டில் இருந்ததால் ஜூலியின் சயனைடு சூப்பில் இருந்து தப்பியிருந்தார். இதே போல் சாஜுவின் மனைவி சிலியின் உறவினர்களும் புகார் அளிக்க உயிரிழந்தவர்களின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு கூறாய்வு செய்யப்பட்டன. அதன்மூலம் உண்மை வெளிவந்தது. இதுதொடர்பாக ஜூலி, அவரது கணவர் சாஜு, நகைப்பட்டறை ஊழியர் சாஜு ஆகியோரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். 

விசாரணையில் 6 பேரையும் கொலை செய்ததை ஜூலி ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் தெரிவித்த போலீசார், அனைவரும் உணவு உட்கொண்ட பிறகு சிறிது நேரத்தில் இறந்துள்ளனர். எனவே சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்திருப்பது உறுதியாகியுள்ளது. முதல் கொலையான அன்னம்மா உயிரிழப்புக்கு முன்னதாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் அவரது ரத்தத்தை பரிசோதனை மருத்துவர்கள் இறப்புக்கான காரணத்தை கண்டுபிடிக்காமல் விட்டுள்ளனர். அதனால் இத்தனை கொலைகள் தொடர்ந்துள்ளன என தெரிவித்தனர்.