இந்தியா

“நாட்டிற்காகத் தியாகம் செய்ததற்காகப் பெருமைப்படுகிறேன்” -அஷுதோஷ் மனைவி பெருமிதம்

“நாட்டிற்காகத் தியாகம் செய்ததற்காகப் பெருமைப்படுகிறேன்” -அஷுதோஷ் மனைவி பெருமிதம்

webteam

நாட்டிற்காகத் தியாகம் செய்ததற்காகப் பெருமைப்படுகிறேன் என்று அஷுதோஷ் மனைவி கூறியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியான ஹந்த்வாராவில் பயங்கரவாதிகள் ஊடுருவியதால், அவர்களைத் தாக்க இந்திய ராணுவத்துடன் இணைந்து ஜம்மு-காஷ்மீர் போலீஸார் சென்றனர். குப்வாரா மாவட்டத்தில் உள்ள ஹந்த்வாராவில் இருதரப்புக்கும் இடையே பயங்கரத் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. 8 மணி நேரங்களுக்கு மேலாக நடைபெற்ற இந்தத் துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதிகளிடம் இருந்து பெருவாரியான மக்களை ராணுவத்தினர் காப்பாற்றினர்.

ஆனால் ராணுவத்தளபதி அஷுதோஷ் ஷர்மா, மேஜர் அஜூஜ் சுத், ராணுவ வீரர்கள் நாயக் ராஜேஷ், லான்ஸ் நாயக் மற்றும் காஷ்மீர் உதவி ஆய்வாளர் ஒருவர் வீர மரணம் அடைந்தனர். பயங்கரவாதிகள் தரப்பிலிருந்து இருவர் உயிரிழந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. தற்போது மேலும் இந்திய ராணுவப் படையினர் அங்கே குவிக்கப்பட்டு வருகின்றனர். பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுக்க தயாராகி வருகிறது.

இந்நிலையில் அஷுதோஷ் ஷர்மாவின் வீர மரணம் குறித்து அவரது மனைவி பல்லவி மிகத் தைரியமாகப் பேசியுள்ளார். அவர், “எனது கணவர் தனது நாட்டைப் பாதுகாக்கும் போது தன் உயிரைத் தியாகம் செய்ததற்காக பெருமைப்படுகிறேன். அவர் கண்ணீர் விடமாட்டார். நாட்டிற்காகத் தியாகம் செய்வது ஒரு மரியாதை என்பார். அது அவரின் முடிவு. நான் அதை முழுமையாக மதிக்கிறேன்” என்று கூறியுள்ளார். கடந்த பிப்ரவரி 28 அன்று உதம்பூரில் நடந்த ஒரு இராணுவ விழாவில் இவர் தனது கணவரைக் கடைசியாகச் சந்தித்துள்ளார். தொலைபேசியில் கடந்த1 அன்று தான் கடைசியாகப் பேசியதாகவும் அவர் கூறியுள்ளார்.

அஷுதோஷ் ஷர்மாவின் வயதான தாய் என் வாழ்க்கை பாதியாகிவிட்டது என்று உணர்ச்சிப்பட்டு அழுகிறார். எனக்கு ஒரே ஒரு மகன் மட்டுமே என்றும் ஆதங்கம் பொங்கக் கண்ணீர் வடிக்கிறார்.

மறைந்த கர்னல் அசுதோஷ் உ.பி.யில் உள்ள புலந்த்ஷாரைச் சேர்ந்தவர். மூத்த சகோதரர் பியூஷ் ஷர்மா ஜெய்ப்பூருக்கு வேலைக்குப் பிறகு, முழு குடும்பமும் இங்கு வந்தது. புலந்த்ஷாரில் உள்ள பர்வானா கிராமத்தில் அவருக்கு வீடு மற்றும் நிலம் உள்ளது. ஜெய்ப்பூரில் அவரது மனைவி பல்லவி மற்றும் மகள் தமன்னா தவிர, அவருக்கு ஒரு வயதான தாய், மைத்துனர் மற்றும் ஒரு சகோதரியும் உள்ளனர். மூத்த சகோதரர் பியூஷ், அஜ்மீர் சாலையில் உள்ள ஜெய்சிங்பூரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.