கடந்த வாரம் மும்பையில் ரீல்ஸ் எடுப்பதற்காக மலை உச்சிக்கு சென்ற ஒரு பெண் நிலை தடுமாறி 300 அடி பள்ளத்தில் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அடங்குவதற்குள், ஹைதராபாத்தில் ரீல்ஸ் எடுப்பதற்காக பைக்கில் சாகசம் புரிந்த இரு இளைஞர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்த சம்பவம் நடந்துள்ளது. இதில் ஒருவர் இறந்த நிலையில், மற்றொருவர் உயிருக்கு போராடி வருகிறார்.
சமூக வலைதளங்களின் ரீல்ஸ் மோகம் அதிகரித்து வரும் நிலையில், ஆபத்தை உணராத சில இளைஞர்களும் யுவதிகளும் செல்ஃபோனிடம் தங்கள் உயிரை பணயம் வைத்து வருகின்றனர். மக்களிடையே பிரபலம் ஆவதற்கும் லைக்குகளை பெருவதற்கும் எண்ணும் இவர்கள், ஆபத்தை விளைவிக்கக்கூடிய சாகச வீடியோக்களை எடுக்கின்றனர். இவற்றில் சில அவர்களின் உயிர்களை பறித்துவிடுவது பரிதாபத்திற்குரியது.
கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழ்நாட்டில் டிடிஎஃப் வாஸன் சென்ற பைக் விபத்துக்குள்ளானது நமக்கு நினைவிருக்கலாம். அதில் அவர் நூழிலையில் உயிர்தப்பியதும் நமக்கு தெரியும். இதேபோலான சம்பவம் ஒன்று ஹைதராபாத்தில் தற்போது நடந்துள்ளது. ஆனால் இதில் சற்று விபரீதமாகி வாகனம் ஓட்டியவர் இறந்துவிட்டார்.
சம்பவத்தின்படி கடந்த வாரம் ஹைதராபாத்தில் புறநகர் பகுதியான ராச்சகொண்டாவில் இளைஞர்கள் இருவர் ரீல்ஸ் எடுப்பதற்காக ஸ்போர்ட்ஸ் பைக் ஒன்றில் சாகசம் செய்துள்ளனர். இதில் ஒரு இளைஞர் பைக்கை ஓட்டுகிறார். இன்னொரு இளைஞர் பைக்கில் அமர்ந்து ஸ்டண்ட் செய்கிறார்.
ஏற்கனவே பெய்த மழையால் சாலை முழுவதும் ஈரத்துடன் வழுக்கிய நிலையில் இருந்துள்ளது. அதில் இவர்கள் வந்த வாகனமானது, கட்டுப்பாட்டை இழந்து சாலையில் வழுக்கி விபத்துக்குள்ளானது. இளைஞர்கள் இருவரும் தலைக்கவசமும் அணியாததால் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக அப்பகுதி மக்கள் அந்த இளைஞர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த சிவன் என்பவர் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். மற்றொரு இளைஞர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்துக்குள்ளான பகுதியில் இளைஞர்கள் அடிக்கடி பைக் பந்தயத்தில் ஈடுபட்டு வந்தனர் எனவும், இவர்களை போலீஸாரும் பொதுமக்களும் பலமுறை எச்சரித்தும் எந்தவித பலனுமில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த விபத்துக் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.