இந்தியா

ஹேர்கட் பண்ண போய் படுத்த படுக்கையான ஐதராபாத் பெண்.. அது என்ன பியூட்டி பார்லர் ஸ்ட்ரோக்?

ஹேர்கட் பண்ண போய் படுத்த படுக்கையான ஐதராபாத் பெண்.. அது என்ன பியூட்டி பார்லர் ஸ்ட்ரோக்?

JananiGovindhan

பக்கவாதங்கள் குறித்து பொதுவெளியில் பலவாறு தொடர்ந்து விவாதிக்கப்பட்டும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தாலும் அண்மையில் ஐதராபாத்தில் உள்ள அழகு சாதன நிலையத்தில் நடந்த சம்பவம் சற்று அதிர்வலைகளையே ஏற்படுத்தியிருக்கிறது.

அழகு சாதனப் பொருட்களை புதிதாக பயன்படுத்தினாலோ, பியூட்டி பார்லருக்கு முதல் முறையாக செல்பவர்களுக்கு வேண்டுமானால் பொதுவாக ஒவ்வாமை ஏற்படுவதுண்டு. ஆனால் அடிக்கடி அழகு சாதன நிலையத்துக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்த ஐதராபாத்தைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க சீமா என்ற பெண்ணுக்கு பியூட்டி பார்லர் ஸ்ட்ரோக் என்ற பக்கவாதம் ஏற்பட்டிருக்கிறது.

அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு சீமா ஐதராபாத்தில் உள்ள பிரபல சலூனுக்கு ஹேர் கட் செய்ய சென்றிருக்கிறார். முடியை வெட்டுவதற்கு முன்பு ஹேர் வாஷ் செய்வது வழக்கம். அதன் படியே சீமாவுக்கு ஷாம்பூ, கண்டிஷ்னர் போட்டு ஹேர் வாஷ் செய்யப்பட்டிருக்கிறது.

பார்லர்களில் வாஷ் பேசினில் தலையை பின்னோக்கி சாய்த்தபடி வைத்து ஹேர் வாஷ் செய்வதே வழக்கம். அந்த வகையிலேயே சீமாவுக்கும் கிட்டத்தட்ட 15 நிமிடங்களுக்கு மேலாக ஹேர் வாஷ் செய்யப்பட்டிருக்கிறது. அந்த இடைப்பட்ட நேரம் முழுவதும் தலையை அண்ணார்ந்து பார்த்தபடி பின்னோக்கி சாய்த்து வைத்திருந்ததால் மூளைக்கு போகும் ரத்தம் தடைபட்டதால் பார்லரிலேயே சீமா வாய் தளதளக்க, கீழே விழுந்திருக்கிறார்.

இதனையடுத்து உடனடியாக அருகே இருந்த மருத்துவமனையில் சிகிச்சை அளித்தபோது சீமாவுக்கு பியூட்டி பார்லர் ஸ்ட்ரோக் (பக்கவாதம்) ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டிருக்கிறது.

வெகுநேரம் தலையை பின்னோக்கி சாய்த்தபடி வைத்து ஹேர் வாஷ் செய்வதாலும், கழுத்தில் சொடக்கு எடுப்பதாலும் மூளைக்கு செல்லும் நம்புகளில் காயம் ஏற்படுவதால் ரத்த ஓட்டம் தடைப்படுவதாலேயே இந்த பியூட்டி பார்லர் ஸ்ட்ரோக் ஏற்பட முக்கிய காரணமாக இருக்கிறது என செகந்திராபாத் கே.எம்.சி. மருத்துவமனை மருத்துவர் பிரவீன் குமார் யாதா கூறியிருக்கிறார்.

மேலும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, ஹைப்பர்டென்ஷன் போன்ற உபாதைகள் இருப்போர் பார்லரில் ஹேர் வாஷ் செய்ய பின்னோக்கி கழுத்தை வைப்பதால் இந்த வகையான ஸ்ட்ரோக் வரும் எனவும் நரம்பியல் மருத்துவர்கள் எச்சரித்திருக்கிறார்கள். இதுபோக ஸ்ட்ரோக் வருவதற்கான அறிகுறிகளாக, “வாந்தி, குமட்டல், தலைச் சுற்றல், கைகள் செயலிழப்பு, நடப்பதில் சிரமம், பேச்சுக் குளறுவது, முகம் கோணுவது” போன்றவை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.