ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் அமிதா மெஹோத். 42 வயதான இவர், தன் மகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், நேற்று (மார்ச் 21) மதியம் 2 மணியளவில் அவருடைய வீட்டிற்கு வந்த 2 கொள்ளையர்கள், கதவைத் தட்டியுள்ளனர். அப்போது அந்த வீட்டுப் பணிப் பெண் கதவைத் திறந்துள்ளார். அவரிடம், ‘உள்ளே இருப்பவரிடம் பார்சல் கொடுக்க வேண்டும்’ என அவர்கள் கூறியுள்ளனர். அதற்கு அவர், ‘வெளியே காத்திருங்கள்’ எனக் கூறியுள்ளார்.
உடனே அவர்களில் ஒருவன் கத்தியை எடுத்து பணிப்பெண்ணின் கழுத்தில் வைத்துள்ளான். இன்னொருவன் துப்பாக்கியை எடுத்துள்ளான். பின்னர், இருவரும் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். வீட்டில் இருந்த அமிதா மெஹோத் மற்றும் அவரது மகளிடம், ‘இங்கு இருக்கும் விலை உயர்ந்த பொருட்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளனர். இதைக் கேட்டு சுதாரித்த அவர்கள் இருவரும் அந்தக் கொள்ளையர்களை அடித்து விரட்டினர். அத்துடன் தப்பிச் சென்ற கொள்ளையர்களைச் சத்தமிட்டுப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பின்னர் தப்பியோடிய கொள்ளையர்களை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் பிடித்துள்ளனர். அவர்கள் பிரேம் சந்த் மற்றும் சுஷில் என தெரியவந்துள்ளது. இதுகுறித்து புகார் அளித்ததன்பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது. துணிச்சலுடன் செயல்பட்ட அந்தப் பெண்களை, வடக்கு காவல் துணை ஆணையர் ரோகினி பிரியதர்ஷினி பாராட்டியுள்ளார்.