இந்தியா

‘பப்ஜி விளையாடியதால் 19 வயது இளைஞருக்கு பக்கவாதம்’ - மருத்துவ அறிக்கை 

‘பப்ஜி விளையாடியதால் 19 வயது இளைஞருக்கு பக்கவாதம்’ - மருத்துவ அறிக்கை 

webteam

தொடர்ந்து பப்ஜி விளையாடியதால் 19 வயது இளைஞர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹைதராபாத்தில் 19 வயது இளைஞர் திடீரென பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த 26ம் தேதி அந்த இளைஞரின் வலது காலும், வலது கையும் செயல்படாமல் போயுள்ளது. உடனடியாக அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இளைஞரை பரிசோதித்த மருத்துவர்கள் மூளையில் ஏற்பட்ட ரத்தத் தடையால் பக்கவாதம் ஏற்பட்டதாக தெரிவித்தனர். இளைஞர் தொடர்ந்து பப்ஜி விளையாடியதே உடல்நலக்குறைவுக்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும் மூளைக்கு செல்லும் ரத்தம் தடைபடுவதால் உடலுறுப்புகள் பாதிக்கப்படுகின்றன. இந்த வகையான பக்கவாதம் வயதானவர்களையே தாக்கும். ஆனால் தற்போது இளைஞர்களும் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். உடல்நிலையில் கவனம் கொள்ளாமல் ஆன்லைன் விளையாட்டுகளில் தொடர்ந்து இயங்குவதே இந்த மாதிரியான பிரச்னைகளுக்கு காரணம் என தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மாணவரின் பெற்றோர், சரியாக சாப்பிடாமல், தூங்காமல், தண்ணீர் குடிக்காமல் ஒருநாளைக்கு 10 மணி நேரம் வரை பப்ஜி விளையாடுவான். திடீரென கை, கால்களை அசைக்க முடியவில்லை எனக் கூறினான். உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தோம் என தெரிவித்தனர்.

இளைஞர்கள் ஆன்லைன் விளையாட்டில் மூழ்காமல் உடல் நலனில் அக்கறை கொள்ள வேண்டிமென மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.

மனதளவிலும் உடலளவிலும் பாதிப்பை ஏற்படுத்துவதால் பப்ஜி விளையாட்டை தடை செய்ய பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்தியாவில் பப்ஜி விளையாட்டை குஜராத் அரசு  ஏற்கெனவே தடை செய்துள்ளது. இன்னும் சில மாநிலங்கள் இந்த விளையாட்டை தடை செய்ய தீவிரமாக யோசித்து வருகின்றன.