அசாதுதீன் ஒவைசி எக்ஸ் தளம்
இந்தியா

”240 இடங்களுடன் நிறுத்தி மக்கள் பாஜவுக்கு பாடம் புகட்டிவிட்டனர்” - அசாதுதீன் ஒவைசி

Prakash J

18வது மக்களவைத் தேர்தலில் தெலங்கானா மாநில தலைநகரான ஹைதராபாத் தொகுதியில் இருந்து மீண்டும் போட்டியிட்டவர் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) தலைவர் அசாதுதீன் ஒவைசி. இவருடைய கோட்டையாகக் கருதப்படும் ஹைதராபாத்தில், பாஜகவின் சார்பில் பரதநாட்டிய கலைஞர் மாதவி லதா களமிறக்கப்பட்டுள்ளார். இவர், ஆரம்பம் முதலே இஸ்லாம் மதத்தினருக்கு எதிரான கருத்துகளைப் பேசி வந்ததுடன், சில சர்ச்சையான செய்கைகளாலும் வைரலாக்கப்பட்டார். இதன் எதிரொலியாக அவர் நடைபெற்று முடிந்த தேர்தலில் தோல்வியைத் தழுவினார். அசாதுதீன் ஒவைசி 3,38,087 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஒவைசி 6,61,981 வாக்குகள் பெற்று 3,23,894 வாக்குகள் பெற்ற பாஜகவின் மாதவி லதாவை தோற்கடித்தார்.

இந்த நிலையில், "400 இடங்களைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டனர்" என்று அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர், “400 இடங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தவர்கள் 240 இடங்களோடு நிறுத்தப்பட்டுவிட்டனர். ஆணவம் கொண்டவர்களை ஏற்றுக்கொள்ள முடியாது என பாஜகவினருக்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டனர். மத்திய பிரதேசத்தின் மாண்டியா பகுதியில் 11 வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. மாட்டுக்கறியை கடத்தியவர்கள் மீதான நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த செயல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நீட் தேர்வு தற்போது வேடிக்கையாக மாறியுள்ளது. நடப்பாண்டில் நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 14ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜூன் 4ஆம் தேதியே முடிவுகள் அறிவிக்கப்பட்டன. வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து மாணவர்களின் பெற்றோர் குற்றம்சாட்டி வந்த நிலையிலும், அவர்களை யாரும் கண்டுகொள்ளவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: மம்தாவுடன் பாஜக எம்.பி. திடீர் சந்திப்பு.. தாவும் 3 எம்.பிக்கள்?.. மேற்கு வங்க அரசியலில் பரபரப்பு!

முன்னதாக, “பாஜக தனிப்பெரும்பான்மை பெற முடியாமல் 240 இடங்களில் சுருங்கியதற்கு அக்கட்சி தலைவர்களின் ஆணவப்போக்கே காரணம்” என ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் சாடியிருந்தார்.

பின்னர், வலுவான எதிர்ப்புக்குப் பிறகு அந்த கருத்து விளக்கம் அளித்து பல்டி அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அசாதுதீன் ஒவைசியும் பாஜகவின் ஆணவமே இத்தகைய தோல்விக்குக் காரணம் எனப் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ”முதலில் தேர்தலை நடத்துங்கள்”-இஸ்ரேலில் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்!