இந்தியா

''வேப்பமரத்தை வெட்டிட்டாங்க; ஆக்‌ஷன் எடுங்க..'' - வனத்துறைக்கு போன் போட்ட சிறுவன்!

''வேப்பமரத்தை வெட்டிட்டாங்க; ஆக்‌ஷன் எடுங்க..'' - வனத்துறைக்கு போன் போட்ட சிறுவன்!

webteam

தனக்கு பிடித்த வேப்ப மரத்தை வெட்டியதால் வனத்துறைக்கு போன் செய்து புகார் அளித்த 8ம் வகுப்பு மாணவன். மாணவனின் புகாரின்படி மரம் வெட்டியவருக்கு ரூ.62ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது

தெலங்கானாவில் 8-ம் வகுப்பு படிக்கு மாணவன் ஒருவர், வனத்துறை அதிகாரிக்கு போன் செய்துள்ளார். அரசு அறிவித்த டோல் ஃப்ரீ எண்ணுக்கு போன் செய்த சிறுவன், தான் ஒரு பசுமை ஆர்வலர் என்றும், தன் வீட்டுக்கு அருகில் இருந்த 40 வருட பெரிய வேப்பமரத்தை வெட்டிவிட்டதாக புகார் அளித்துள்ளார். சிறுவனின் புகாரை ஏற்றுக்கொண்ட வனத்துறை சம்பந்தப்பட்ட இடத்தில் விசாரணை செய்தனர்.

அங்கு புதிதாக கட்டும் கட்டடத்துக்கு எதிரே இருந்த வேப்பமரம் வெட்டப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து மரத்தை வெட்டிய நபருக்கு ரூ.62ஆயிரத்து 75 ரூபாய் அபராதம் விதித்தனர். விசாரணையில் புதிதாக கட்டும் கட்டுமானப்பணிக்கு இடையூறாக இருப்பதாக மரத்தை வெட்டியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் 40ஆண்டுகால மரத்தை வெட்ட வனத்துறையிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்றும் தவறும்பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இயற்கை மீதான ஆர்வத்தை கொண்டுள்ள சிறுவனுக்கு பாராட்டுகளையும் வனத்துறையினர் தெரிவித்தனர்