இந்தியா

இது என்ன வகை நோய்? - 50 வயது பெண்ணின் 12 கிலோ கல்லீரலை நீக்கி மருத்துவர்கள் சாதனை

இது என்ன வகை நோய்? - 50 வயது பெண்ணின் 12 கிலோ கல்லீரலை நீக்கி மருத்துவர்கள் சாதனை

Sinekadhara

ஹைதராபாத்தில் அரியவகை மரபணு பிரச்னையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கல்லீரல் மற்றும் சிறுநீரங்களை நீக்கி, உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர் KIMS மருத்துவர்கள்.

ஒரு மனிதனுடைய கல்லீரலின் எடை பொதுவாக 1.5 கிலோகிராம். ஆனால் ஒரு பெண்ணுக்கு மரபணு கோளாறு காரணமாக கல்லீரலின் எடை 12 கிலோ வரை வளர்ந்துள்ளது என்றால் நம்பமுடிகிறதா? மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் உஷா அகர்வால். 50 வயதான இப்பெண்மணிக்கு கல்லீரலில் நீர்க்கோர்த்ததால் கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்தே நடக்கவே முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். மருத்துவரை அணுகியபோது அந்த பெண்ணுக்கு PLD என்று சொல்லக்கூடிய பாலிசிஸ்டிக் கல்லீரல் நோய் இருப்பது தெரியவந்தது. மேலும், பாலிசிஸ்டிக் சிறுநீரக பிரச்னையும் இருந்துள்ளது. இது மரபணு பிறழ்வு மற்றும் நீர்க்கட்டிகளால் ஏற்படக்கூடிய ஒருவித அரியவகை பரம்பரை பிரச்னை. இதனால் அப்பெண்ணின் கல்லீரல் எடை 12 கிலோ வரை வீங்கியிருந்தது.

மிகவும் மோசமான நிலையிலிருந்த பெண்ணின் சிறுநீரகம் மற்றும் கல்லீரலை நீக்கி, அதே நேரத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையையும் வெற்றிகரமாக மேற்கொண்டு சாதனை படைத்துள்ளனர் ஹைதராபாத்தைச் சேர்ந்த மருத்துவர் குழு. KIMS மருத்துவமனையின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் HPB அறுவை சிகிச்சை தலைமை மருத்துவர் ரவிசந்த் சித்தாசாரி தலைமையிலான 4 பேர் கொண்ட நிபுணர்கள் குழு 14 மணிநேரம் அறுவைசிகிச்சை மேற்கொண்டு வெற்றிகரமாக புதிய கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை பொருத்தியுள்ளனர்.

இதுகுறித்து டாக்டர் சித்தாசாரி கூறுகையில், “இந்த நோயாளிகளுக்கு 30-களில் இந்த நோய்க்கான எந்த அறிகுறிகளும் தென்படாது. கட்டி வளர வளர அவர்களுக்கு அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும். நீர் கோர்க்க கோர்க்க இந்த கட்டிகள் மிகப்பெரிய அளவில் வளரக்கூடியவை. இதனால் குடலிறக்கம் மற்றும் மூச்சுப்பிரச்னைகள் ஏற்படும். இந்த நோயாளிகளின் சிறுநீரக செயல்பாடு குறைந்துபோவதால் டயாலிசிஸ் செய்யவேண்டி இருக்கும்.

தற்போது அறுவைகிச்சை மேற்கொள்ளப்பட்ட பெண்ணுக்கு அதீத குடலிறக்கம் ஏற்படவில்லை என்றாலும், மற்ற அனைத்து அறிகுறிகளும் காணப்பட்டது. கடந்த மாதம் வெற்றிகரமாக அறுவைசிகிச்சை மேற்கொண்ட நிபுணர்கள் இரண்டு உறுப்புகளை வெற்றிகரமாக மாற்றி பொருத்தியுள்ளனர். தற்போது அந்த நோயாளி நலமுடன் உள்ளார்” என்று கூறியுள்ளார்.