இந்தியா

5 மணி நேரம் விடாமல் கொட்டி தீர்த்த மழை: மிதக்கிறது ஹைதராபாத்

rajakannan

ஹைதராபாத்தில் விடாமல் பெய்த திடீர் கனமழையால் நகரின் முக்கிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

ஹைதாராபாத் நகரில் நேற்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. மாலை 4 மணி முதல் சுமார் 5 மணி நேரம் விடாது மழை கொட்டி தீர்த்தது. இதனால், நகரின் சாலைகள் எங்கும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகளில் மழை நீர் சூழ்ந்ததால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. கனமழையால் தண்டவாளங்கள் மழை நீரில் மூழ்கியது. இதனால், உள்ளூர் ரயில் சேவை சுமார் 12 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. அதேபோல், பல்வேறு இடங்களில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்த திடீர் கனமழைக்கு நேற்று 3 பேர் உயிரிழந்தனர். இதில், பஞ்ஜாரா பகுதியில் சுவர் இடிந்து விழுந்து 6 மாத குழந்தை, தந்தை இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். சார்மினார் பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலியானார். மாலை 4.30 முதல் இரவு 8.30 மணி வரை 67.6 மி.மீ மழை பெய்ததாக ஹைதராபாத் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், ஹைதராபாத் மாநகராட்சி மற்றும் நகர காவல்துறையினர் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது