இந்தியா

2008-லேயே ஆசிட் வீச்சுக்கு ‘என்கவுன்ட்டர்’ - சைபராபாத் ஆணையரின் பின்னணி..!

webteam

தெலங்கானாவில் இளம் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் கைதான 4 பேரும் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 

கடந்த 28-ஆம் தேதி ஹைதராபாத் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பெண் கால்நடை மருத்துவரின் உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக லாரி ஓட்டுநர்கள் முகமது பாஷா, சின்னகேசவலு, கிளீனர்கள் சிவா, நவீன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் 4 பேரும் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். விசாரணைக்காக பெண் மருத்துவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்துக்கு அழைத்துச் சென்ற போது 4 பேரும் தப்பிச்செல்ல முயன்றதால் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் கைதான நால்வரும் அதிகாலை 3 மணியளவில் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த என்கவுன்ட்டரின் போது மூன்று காவல்துறையினர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சுட்டுக் கொல்லபப்ட்ட நால்வரின் உடல்களும் ஷாத் நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க தெலங்கானா அரசு விரைவு நீதிமன்றம் அமைத்திருந்த நிலையில் அங்கு விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே 4 பேரும் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளனர். இந்த நால்வரும் சுட்டுக்கொல்லப்பட்டதற்காக சைபராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இவர் ஏற்கெனவே 2008-ல் வாரங்கல் எஸ்.பி.யாக இருந்தபோது ஆசிட் வீச்சு குற்றவாளிகள் இருவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதனால் இவரை போலீஸ் வட்டாரத்தில் ‘என்கவுன்டர் போலீஸ்’ என அழைப்பதாகவும் கூறப்படுகிறது. சமூகவலைத்தளங்களிலும் 4 பேர் என்கவுன்ட்டருக்கு ஆதரவாக பலர் பதிவிட்டு வருகின்றனர்.