இந்தியா

ஹைதராபாத் கனமழை: ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை அளித்த பள்ளிகள்.!

ஹைதராபாத் கனமழை: ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை அளித்த பள்ளிகள்.!

webteam

கனமழை காரணமாக தெலங்கானாவில் பல பள்ளிகள் ஆன்லைன் வகுப்புக்கு விடுமுறை அறிவித்துள்ளன

வங்கக்கடலில் வலுப்பெற்றிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையைக் கடந்த நிலையில், தெலங்கானாவில் கனமழை கொட்டியது. ஹைதராபாத்தில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன.தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் மட்டும் 2‌ சென்டி மீட்டர் மழை கொட்டியது.

இதில் பண்ட்லகுடா, வசந்தாலிபுரம், தம்மைகுடா, முஷீராபாத், டாலி சௌக்கி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது.பல இடங்களில் மழைநீரில் கார் உள்ளிட்ட வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. தீயணைப்பு மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே கனமழை காரணமாக பல பள்ளிகள் ஆன்லைன் வகுப்புக்கு விடுமுறை அறிவித்துள்ளன. கனமழை காரணமாக மின்சாரம் தடைபட்டுள்ளதாலும், நெட்வொர்க் பிரச்னை ஏற்பட்டுள்ளதாலும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஏதும் அறிவிப்பு வெளியிடவில்லை என்றாலும் அந்தந்த பள்ளி நிர்வாகம் விடுமுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளன. கனமழை காரணமாக மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. இதனால் பல இடங்களில் மின்சாரம் தடைபட்டுள்ளது.