இந்தியா

பறிமுதல் செய்யப்பட்ட பாஜகவின் ரூ.8 கோடி ! தெலங்கானாவில் அதிரடி

பறிமுதல் செய்யப்பட்ட பாஜகவின் ரூ.8 கோடி ! தெலங்கானாவில் அதிரடி

Rasus

பாஜகவிற்கு சொந்தமான ரூ.8 கோடி பணத்தை ஹைதராபாத் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிப்பையொட்டி நாடு முழுவதிலும் தேர்தல் விதிகள் அமலில் உள்ளன. பணப்பட்டுவாடாவை தடுக்கும்பொருட்டு தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஹைதராபாத்தில் பாஜகவிற்கு சொந்தமான ரூ.8 கோடி பணத்தை ஹைதராபாத் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

ஹைதராபாத்தின் முக முக்கியமான பகுதியான கருதப்படும் நாராயன்குடா பகுதியில் இந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டுளள்து. முதலில் ஒரு காரை சோதனையிட்ட போலீசார் அதில் இருந்து 2 கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் காரில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையின், வங்கி அருகாமையில் நின்றிருந்த 5 பேரிடம் இருந்து 6 கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். தெலங்கானாவில் ஒரே நேரத்தில் தற்போதுதான் அதிகப்பட்டியான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை பாஜக வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய வைத்திருந்ததாக ஒரு தகவல் பரவியது. இதனையடுத்து அக்கட்சியின் தலைவர்கள் இதுகுறித்து உடனடியாக பதில் அளித்துள்ளனர். பாஜகவின் மாநில செய்தித் தொடர்பாளரான கிருஷ்ண சாகர் ராவ் கூறும்போது, “ நாங்கள் எங்கள் பணத்தை எங்கள் கட்சியின் வங்கிக் கணக்கிலிருந்தே எடுத்துள்ளோம். அதனை அலுவலகத்திற்கு கொண்டு செல்லும் வழியில் போலீசார் குறுக்கிட்டு எங்கள் பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர். அதுமட்டுமல்லாமல் போலீசார் வங்கிக்கு சென்று மீதமுள்ள பணத்தை மற்றவர்களிடம் இருந்தும் எடுத்துச் சென்றுள்ளனர்.

இது முழுக்க முழுக்க டிஆர்எஸ் கட்சியின் அரசியல் சதி. அத்துடன் அத்துமீறிய இந்த செயலுக்கு எங்களது கடுமையான கண்டத்தை தெரிவித்துக் கொள்கிறோம். பாஜக எந்தவொரு அரசியல் சட்டத்தையும் மீறவில்லை. அத்துடன் தேர்தல் ஆணையத்தின் விதிகளையும் மீறவில்லை. வங்கியிலிருந்து எடுக்கப்பட்ட பணம், சப்ளையர்களுக்கு செலுத்த வேண்டிய கடனை திரும்பச் செலுத்துவதற்கான பணம் ஆகும். அத்துடன் போலீசார் எடுத்துச் சென்ற பணம் மீண்டும் எங்களுக்கு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது.” என்றார்.

ஹைதராபாத் போலீஸ் ஆணையரான அஞ்சானி குமார் இதுகூறித்து கூறும்போது, “ போலீசார் கடந்த இரண்டு நாட்களில் 4.92 கோடி பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக அரசியல் கட்சியை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்” என்றார். இருப்பினும் எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவர் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.