அகமதாபாத்திற்கு அருகில் இருக்கும் ஷாலிமார்ஷா என்ற கிராமத்தில் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வந்தவர் அஹேஜாஸ்கான் (வயது 35). இவரது மனைவி குரேஷாபானு. இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.
அஹேஜாஸ்கானுக்கு சரியான வேலை இல்லாததால் கணவன் மனைவி இருவருக்குள்ளும் அடிக்கடி தகறாறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையறிந்து குரேஷாபானுவின் உடன் பிறந்தவர்கள், தங்களின் சகோதரி வறுமையால் வாடுவதை பார்த்து அஹேஜாஸ்கானுக்கு தங்களது செலவில் ஆட்டோ ஒன்றை வாங்கி கொடுத்துள்ளனர். மேலும் ஷாலிமார்ஷாவில் தங்களது வீட்டிற்கு அருகிலேயே அவர்களை குடிவைத்துள்ளனர். இருப்பினும், போதிய அளவு வருமானம் இல்லாததால் கணவன் மனைவி இருவருக்குள்ளும் அடிக்கடி தகறாறு ஏற்பட்டு வந்துள்ளது.
சம்பவம் நடந்த கடந்த திங்கள்கிழமை காலை, கணவன் மனைவி இருவருக்குள்ளும் ஏற்பட்ட தகறாரில் ஆத்திரம் கொண்ட அஹேஜாஸ்கான் தனது ஆட்டோவில் வைத்திருந்த உபகரணம் (ஸ்க்ரூ ட்ரைவர்) ஒன்றைவைத்து, மனைவியை கழுத்திலும் முகத்திலும் பலமுறை பலமாக தாக்கியுள்ளார்.
இதை கண்டு பயந்த குழந்தைகள் அருகில் இருக்கும் தங்களின் மாமா வீட்டிற்கு சென்று நடந்ததை கூறியிருக்கின்றனர். அவர்கள் வந்து பார்த்தப்பொழுது, ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார் குரேஷாபானு. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இருப்பினும் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து, கொலை செய்த அஹேஜாஸ்கானின் மீது போலீஸில் புகார் அளித்தனர். அதன்கீழ் உடனடியாக அஹேஜாஸ்கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.