மும்பையில் திருமண நாளை மறந்த கணவனை, தன்னுடைய குடும்பத்தாருடன் சேர்ந்து மனைவி சரமாரியாக அடித்து தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த இளைஞர் போலீசில் புகாரளித்துள்ளார்.
மும்பையின் புறநகர் பகுதியான காத்கோபரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. விஷால் நாங்க்ரே(32) என்ற நபருக்கும், கல்பனா (27) என்ற பெண்ணுக்கும் கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. விஷால் ஒரு கொரியர் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலைபார்த்து வருகிறார். கல்பனா ஒரு உணவு நிறுவனத்தில் வேலையில் உள்ளார். இந்நிலையில் பிப்ரவரி 18ஆம் தேதி இவர்களுடைய திருமண நாள் வந்துள்ளது. ஆனால், விஷால் தனது திருமண நாளை மறந்துவிட்டதால் மனைவிக்கு வாழ்த்துதல் தெரிவிக்கவில்லை என தெரிகிறது.
இதில் ஆத்திரமடைந்த கல்பனா அவரிடம் சண்டையிட்டுள்ளார். மறுநாள் வேலைக்கு சென்றுவிட்டு கல்பனா வீடு திரும்பியபோது விஷால் தனது வாகனத்தை கழுவிக் கொண்டிருந்துள்ளார். இதனைப் பார்த்து மேலும் ஆத்திரமடைந்த கல்பனா அவரிடம் சண்டையிட்டது மட்டுமின்றி, தனது பெற்றோர் மற்றும் சகோதரரை போன் செய்து அழைத்துள்ளார். உடனடியாக அங்குவந்த கல்பனாவின் குடும்பத்தார் விஷாலிடம் சண்டையிட்டதுமில்லாமல் அவரை அடித்து தாக்கியுள்ளனர். மேலும், விஷாலின் வாகனத்தையும் கல்பனாவின் சகோதரர் அடித்து உடைத்துள்ளார்.
இத்தோடு நிற்காமல் இரவு 9.30 மணியளவில் விஷாலின் தாயார் வீட்டிற்கு சென்ற கல்பனா மற்றும் அவரது குடும்பத்தினர் அங்கும் சண்டையிட்டுள்ளனர். விஷாலின் தாயாரை கல்பனா கன்னத்தில் ஓங்கி அறைந்தது மட்டுமின்றி, அங்குவைத்து விஷாலை மீண்டும் அடித்து தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த விஷால் மற்றும் அவரது தாயார் இருவரும் ராஜவாடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
இதனையடுத்து மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர்மீது விஷால் காத்கோபர் போலீசில் புகார் அளித்துள்ளார். குற்றம் உறுதியானதை அடுத்து கல்பனா மற்றும் அவரது குடும்பத்தினர்மீது இந்திய சட்டப்பிரிவுகள் 323, 324, 327, 504, 506 மற்றும் 34-இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக சீனியர் ஆய்வாளர் சஞ்சய் தஹாகே தெரிவித்துள்ளார்.