இந்தியா

மட்டன் சமைக்க மனைவி மறுப்பதாக கூறி 100க்கு போன் செய்த கணவன்-வீட்டிற்கு படையெடுத்த போலீசார்

மட்டன் சமைக்க மனைவி மறுப்பதாக கூறி 100க்கு போன் செய்த கணவன்-வீட்டிற்கு படையெடுத்த போலீசார்

webteam

தெலங்கானாவில் மனைவி மட்டன் சமைக்கவில்லை என்பதால் தொடர்ச்சியாக 100க்கு டயல் செய்து தொந்தரவு அளித்த கணவன் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள செர்லா கௌராராம் கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன். ஹோலி பண்டிகையையொட்டி தனது மனைவியிடம் மட்டன் சமைத்து தருமாறு கூறியுள்ளார். ஆனால் நவீனின் மனைவி மட்டன் சமைக்க மறுத்துள்ளார். இருவருக்கும் இடையே மட்டன் சமைப்பது தொடர்பாக வாக்குவாதம் நடந்துள்ளது. பண்டிகை நாளில் கூட விரும்பியதை சமைக்கவில்லை என நவீன் கோபம் கொண்டுள்ளார். மேலும் நவீன் போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. தனது மனைவி குறித்து புகாரளிக்க 100க்கு டயல் செய்து காவல்துறையை அணுகியுள்ளார். முதலில் இது ஒரு குறும்பு அழைப்பு என மறுமுனையில் இருந்த காவலர் அழைப்பை துண்டித்துள்ளார். ஆனால் நவீன் தொடர்ந்து 6 முறைக்கு மேல் 100க்கு டயல் செய்து கொண்டே இருந்துள்ளார்.

நவீன் தொடர்ந்து அழைப்புகளை செய்தபோது, அழைப்புகளை கையாளும் காவல்துறை அதிகாரி தனது மேலதிகாரிகளுக்கு இந்த சம்பவத்தை புகாராக தெரிவித்தார். காவல்துறையினர் நவீன் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்தனர். தொலைபேசி எண்ணை வைத்து அழைத்தது யார் எனக் கண்டுபிடித்தனர், மறுநாள் காலை சில போலீஸ்காரர்கள் அவரது வீட்டிற்குச் சென்று அவரைக் கைது செய்தனர்.

நவீன் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 290 (பொது தொல்லை) மற்றும் 510 (குடிபோதையில் பொது இடத்தில் தவறான நடத்தை) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். டயல் 100 வசதியை தவறாகப் பயன்படுத்த வேண்டாம் என்று காவல்துறை மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது, இது மதிப்புமிக்க நேரத்தை இழக்க வழிவகுக்கிறது மற்றும் உண்மையான அவசர அழைப்புகளைப் பார்ப்பதில் சிக்கலை ஏற்படுத்திவிடும் என காவல்துறை தெரிவித்துள்ளது.