கார்கே, ஃபரூக் அப்துல்லா, ராகுல் காந்தி, பிரதமர் மோடி pt web
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் தொங்கு சட்டசபை? கருத்துக்கணிப்புகளால் அதிகரிக்கும் சிறிய கட்சிகளின் முக்கியத்துவம்?

கணபதி சுப்ரமணியம்

தொங்கு சட்டசபை

ஜம்மு-காஷ்மீரில் எந்தக்கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிட்டாது என கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிறிய கட்சிகள் யாருக்கு ஆதரவு அளிக்கும் என்பது மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. தேசிய மகாநாடு-காங்கிரஸ் கூட்டணி 44 இடங்கள் வரை கைப்பற்றலாம் என கருதப்படும் நிலையில், இந்தக் கூட்டணிக்கு பெரும்பான்மை கிட்டாவிட்டால், தொங்கு சட்டசபையில் சிறிய கட்சிகளின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என ஸ்ரீ நகர் மற்றும் ஜம்முவில் உள்ள அரசியல் தலைவர்கள் கருதுகிறார்கள்.

ஜம்மு - காஷ்மீர்

ஜம்மு-காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று, செவ்வாய்க்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தற்போது யூனியன் பிரதேசமாக உள்ள ஜம்மு-காஷ்மீரில் துணைநிலை ஆளுநர் ஐந்து நியமன உறுப்பினர்களை சட்டமன்றத்திற்கு நியமிக்க முடியும். நியமன உறுப்பினர்களுடன் ஜம்மு-காஷ்மீர் சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 95 ஆக உயரும். அப்படிப்பட்ட சூழலில், தேசிய மகாநாடு-காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் ஆதரவு தேவைப்படும்.

பெரும்பான்மைக்கு 48 உறுப்பினர்கள்

அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் மக்கள் ஜனநாயக கட்சி புதிய கூட்டணி அரசுக்கு ஆதரவு அளிக்குமா? இதில் ராஷித் இன்ஜினியரின் கட்சி, மக்கள் மகாநாடு, அப்னி பார்ட்டி மற்றும் சுயேச்சைகள் யாருக்கு ஆதரவு அளிப்பார்கள் என்பதே நிலையான அரசு அமையுமா என்பதை தீர்மானிக்கக் கூடிய அம்சமாக இருக்கலாம் என ஜம்மு காஷ்மீர் அரசியல் தலைவர்கள் கருதுகிறார்கள்.

மக்கள் ஜனநாயக கட்சிக்கு ஐந்து இடங்கள் கிடைக்கலாம் எனவும், ராஷித் இன்ஜினியரிங் கட்சிக்கு ஏழு இடங்கள் வரை கிடைக்கலாம் எனவும், ஆறு சுயேச்சைகள் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது எனவும் பல்வேறு கருத்துக்கணிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. மக்கள் மகாநாடு மற்றும் அப்னி பார்ட்டி தலா இரண்டு இடங்களை கைப்பற்றும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. நியமன உறுப்பினர்களையும் கணக்கிட்டால், ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தில் பெரும்பான்மைக்கு 48 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் தேசிய மகாநாடு-காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாரதிய ஜனதா கட்சி அல்லாத கிட்டத்தட்ட 20 சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 20 சட்டமன்ற உறுப்பினர்கள் கணிப்புபடி வெற்றி பெற்றால், தேசிய மாநாடு-காங்கிரஸ் கூட்டணி இவர்களில் பெரும்பாலோரை தங்கள் பக்கம் இழுக்க முயற்சிகளை செய்யலாம் என கருதப்படுகிறது. உமர் அப்துல்லா மற்றும் பருக் அப்துல்லா ஏற்கனவே திரை மறைவில் காய்களை நகர்த்தி வருகிறார்கள் என ஜம்மு காஷ்மீர் அரசியல் தலைவர்கள் தெரிவித்தனர். தேசிய மகாநாடு மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி இரண்டுமே காங்கிரஸ் தலைமையில் செயல்படும் "INDIA" கூட்டணியின் அங்கமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், காஷ்மீரில் தேசிய மகாநாடு மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி சட்டசபை தேர்தலில் ஒருவரை ஒருவர் கடுமையாக எதிர்த்து போட்டியிட்டனர்.

வேறு கட்சியைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக பாஜக ஆதரவு?

பாரதிய ஜனதா கட்சி ஜம்மு பகுதியில் அதிக வெற்றி பெறும் எனவும் கிட்டத்தட்ட 30 இடங்களை கைப்பற்ற வாய்ப்பு உள்ளதாகவும் கருத்துக்கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் காஷ்மீர் பகுதியில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்பது அந்தக் கட்சியின் தலைவர்களுக்கு தெளிவாக தெரிந்தாலும், ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தில் நாங்கள் தனி பெரும் கட்சியாக வெற்றி பெறுவோம் என அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

துணைநிலை ஆளுநரால் நியமிக்கப்படும் ஐந்து நியமன உறுப்பினர்கள் பாஜக ஆதரவாளர்களாக செயல்படுவார்கள் என பிற கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், 2014 ஆம் வருடத்தில் மக்கள் ஜனநாயக கட்சியுடன் கைகோர்த்த பாஜக இந்த முறையும் கூட்டணி முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. பல சிறிய கட்சிகள் பாஜகவுக்கு ஆதரவு அளிக்க முன்வர வாய்ப்பு உள்ளதாக அந்த கட்சியின் தலைவர்கள் கருதுகிறார்கள். ராஷித் இன்ஜினியர் கட்சிக்கு கணிசமான இடங்கள் கிடைத்தால், அவரை முதல்வராக்க பாஜக ஆதரவாளிக்கலாம் எனவும் ஜம்முவில் பாஜக மூத்த தலைவர்கள் ஆலோசனைகள் நடத்தி வருகிறார்கள்.

காங்கிரஸ் கட்சிக்கு எதிர்பார்த்ததை போல வெற்றி கிட்டாவிட்டால், தேசிய மகாநாடு தற்போதைய கூட்டணியை முறித்து பாஜகவுடன் கைகோர்க்கும் எனவும் ஜம்மு காஷ்மீர் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அடல் பிஹாரி வாஜ்பாயி மத்தியில் பாஜக அரசின் பிரதமராக இருந்தபோது, உமர் அப்துல்லா கூட்டணியில் மத்திய அமைச்சராக இருந்தார் என பல ஜம்மு காஷ்மீர் தலைவர்கள் நினைவுகூர்ந்தனர்.

பாரதிய ஜனதா கட்சி முதல்வருக்கு ஆதரவு அளிப்பது அரசியல் ரீதியாக காஷ்மீர் பிராந்தியத்தில் ஏற்றுக்கொள்ளப்படாது என்பதால், வேறு கட்சியைச் சேர்ந்த ஒருவரை முதல்வராக பாஜக ஆதரவு அளிக்கலாம் என கருதப்படுகிறது. சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது ஆகியவை காரணமாக பாஜக எதிர்ப்பு அரசியலுக்கு 47 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட காஷ்மீர் பிராந்தியத்தில் மக்களின் ஆதரவு உள்ளது எனவும் பிராந்திய கட்சிகள் பாஜக ஆட்சியைப் பிடிக்க உதவி செய்வதற்கு தயங்கும் எனவும் கருதப்படுகிறது.

காங்கிரஸ் கட்சி ஜம்மு காஷ்மீரில் ஆட்சிக்கு வருவதை தடுத்து, ஆளும் கூட்டணியில் இடம் பிடிப்பது பாஜகவின் முயற்சியாக இருக்கும் என ஸ்ரீநகரில் பரபரப்பாக பேசப்படுகிறது. அதே சமயத்தில் ஜம்முவில் உள்ள 43 தொகுதிகளில் கருத்துக்கணிப்பை விட அதிகமான இடங்களில் வெற்றி பெற்றால், பாஜக ஆட்சி அமைக்கவும் முயற்சி செய்யலாம் என அந்த கட்சியின் தலைவர்கள் கருதுகின்றனர்.

வன்முறையின்றி அதிக வாக்குப்பதிவுடன் தேர்தல் நடைபெற்றது பாஜகவுக்கு வெற்றி எனவும், ஆட்சி அமைக்க வாய்ப்பு கிட்டாவிட்டால் பாஜக ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியாக செயல்படும் எனவும் பாஜக மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார். தொங்கு சட்டசபை வாய்ப்பு காரணமாக ஜம்மு காஷ்மீர் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக திரைமறைவில் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை (அக் 8) வெளிவரும் சட்டசபை தேர்தல் முடிவுகள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.