இந்தியா

மெஸ் சாப்பாட்டால் துவண்டுப் போன மகனின் தோழிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அம்மா!

JananiGovindhan

“வீட்டு சாப்பாட்டோட அருமை வெளியே போனாதான் உங்களுக்கு தெரிய வரும்” அம்மாக்கள் பல நேரங்களில் பிள்ளைகளிடம் கூறும் ஒரே சொற்றொடராக இருக்கும்.

அதுவும் ஹாஸ்டலில் தங்கி படிக்கும், வேலை பார்ப்போரால் அம்மாக்களின் இந்த அன்பு கலந்த வசை எப்போதும் உணர்ச்சி மிகுந்ததாகவே இருந்திருக்கும்.

அப்படியான சம்பவத்தை பற்றிதான் பார்க்கப்போகிறோம். ஷ்ருபெர்ரி என்ற ட்விட்டர் பயனர் ஒருவரின் ட்வீட்தான் நெட்டிசன்களிடையே பேசுபொருளாகியிருக்கிறது.

அதில், “மெஸ் சாப்பாடு மீதான அதிருப்தி குறித்து என்னுடைய நண்பனிடம் தொடர்ந்து கூறிவந்தேன். அவர் தன்னுடைய அம்மாவிடம் என்னுடைய புலம்பலை கூறியிருக்கிறார். இதனால் என் நண்பனின் அம்மா தினமும் எனக்கு உணவு கொடுத்து விடுவார்.

எனக்கு நேரம் இல்லாததால் திருப்பி வெறும் டப்பாவைதான் கொடுக்க முடிகிறது என அவரிடம் கூறியிருந்தேன். அதனால் தற்போது உணவோடு சேர்த்து அழகான லெட்டர் குறிப்பையும் அவர் இணைத்து கொடுத்துள்ளார்.” எனக் குறிப்பிட்டதோடு லஞ்ச் பாக்ஸையும், நண்பரின் அம்மா அனுப்பிய குட்டி லெட்டரையும் இணைத்து பதிவிட்டுள்ளார்.

அந்த லெட்டரில், “அம்மாவுக்கு காலி டிஃபன் பாக்ஸை அனுப்புவதற்கு குழந்தைகள் கவலைப்பட கூடாது. அன்பையும் பாசத்தையும் நிரப்பி அனுப்பினால் போதும். நன்றாக சாப்பிடவும்.” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த பதிவை கண்ட நெட்டிசன்கள் பலரும் தங்களுடைய அம்மாக்கள் தத்தம் நண்பர்களுக்கும் சேர்த்து உணவு கொடுத்து விடுவது குறித்து பகிர்ந்திருக்கிறார்கள்.