பூமிப்பந்தின் ஏதோ ஒரு பகுதியில் இப்போதும் அந்தக் கொடூரம் அரங்கேறி கொண்டுதான் இருக்கிறது. சக மனிதனை மனிதனே அடக்கி ஆள முயல்வதுதான் அது. அதனால், ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கப்பெறவேண்டிய அடிப்படை உரிமைகளும் சுதந்திரங்களும் மறுக்கப்படுகின்றன. அதோடு இனம், மொழி, மதம், சாதி, அரசியல், பணம் முதலானவற்றால் ஒருவரையொருவர் வேற்றுமையோடு பார்ப்பதும் உண்டு. இதுதான் மனித உரிமை மீறல்களுக்கான தொடக்கப் புள்ளி.
கற் காலம் தொடங்கி இன்றைய டிஜிட்டல் யுகத்திலும் மனிதனை மனிதனே அடக்கி ஆளும் கொடூரங்கள் அரங்கேறி வருகின்றன. அது வளர்ந்த நாடுகளில் இன வெறியாகவும், வளர்ந்து வரும் நாடுகளில் சுயநலத்தின் வெளிப்பாடாகவும் தொடர்கிறது.
மனித உரிமை?
பூமியில் பிறந்த அனைவரும் சமம் என்பதை நிலைநாட்டும் வகையில் மனித உரிமை குறித்த சிந்தனைகள் தழைத்துள்ளன. சம உரிமையும், சுதந்திரமும் மனிதனின் பிறப்புரிமை. அதில் எந்தவித வேறுபாடும் இருக்கக் கூடாது என்பதை நிலைநாட்டவே இந்த சிந்தனைகள் உதிக்க காரணம். அதன்மூலம் பூமியில் பிறந்த அனைவரும் சமம் என்பதை நிலைநாட்டவே உலக நாடுகள் முற்படுகின்றன. இருப்பினும் அடிமைத் தனத்தினாலும், சொல்லமாளாத சித்ரவதைகளுக்கு பலரும் சிக்குவது தொடர்ந்து வருகிறது.
கொரோனா பொதுமுடக்க நாட்களில் மனித உரிமை மீறல்கள் உச்சத்தை எட்டியது என சமூக செயல்பாட்டாளர்கள் பலரும் சொல்கின்றனர். இந்தியாவில் கொரோனா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட உடன் உள்நாட்டுக்குள்ளேயே பிழைப்புக்காக புலம்பெயர்ந்து வந்த கோடான கோடி இந்தியர்கள் கால் நடையாக வீடு திரும்பினர். ஆண், பெண், பச்சிளம் குழந்தைகள் என மனிதர்கள் கூட்டம் கூட்டமாக நடந்தபடி ஊர் போய் சேர்ந்ததே அதற்கு சான்று. சிலர் போகும் வழியிலேயே நாவறண்டு உடல் ரீதியாக சிரமமப்பட்டதும் ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாக வெளிவந்தன. அதை அறிந்து சில நல்லுள்ளம் கொண்டவர்கள் அந்த மக்களுக்கு உதவ முன்வந்தனர்.
அதேபோல ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களும் தலை தூக்கின. தேசிய மகளிர் ஆணையம் அதை உறுதி செய்தும் இருந்தது. அதேபோல குழந்தைகளும் அதிக அளவில் ஊரடங்கு காலத்தில் குடும்ப வன்முறைகளுக்கு ஆளானதும் குறிப்பிடத்தக்கது.
இவை அனைத்திற்கும் மேலாக அமெரிக்காவில் இன வெறியால் அந்த நாட்டு போலீசார் ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் ஃபிளாய்ட் கொல்லப்பட்டது மனித உரிமை மீறலின் உச்சம் என சொல்லலாம். காலம் காலமாக இனவெறியை எதிர்த்து ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் போராடி வரும் நிலையில் ஜார்ஜின் படுகொலை உலக மக்களின் கவனைத்தை ஈர்த்தது. BLACK LIVES MATTER என அனைவரும் அவரவர் கணடனங்களை பதிவு செய்தனர்.
கேரளாவில் கடந்த 2018 இல் மதம் பிடித்த மனிதர்களால் கொல்லப்பட்ட பழங்குடி இனத்தை சேர்ந்த மதுவின் மரணம் இந்தியாவையே உலுக்கி இருந்தது.
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் காவலர்கள் நடத்திய கொலை வெறி தாக்குதலில் தந்தையும் - மகனும் லாக்கப்பில் உயிரிழந்தது மனித உரிமை மீறலின் உச்சம்.
இதுதவிர வன்கொடுமை, பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குடும்ப வன்முறைகள், வரதட்சணை கொடுமை, கொத்தடிமை முறை, சாதிய வேறுபாடு, மதக் கலவரங்கள், மனித கடத்தல் மாதிரியான மனித உரிமை மீறல்கள் ஒவ்வொரு நிமிடமும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.
மனிதனே சக மனிதனை வேட்டையாடுவதை தடுக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை கடந்த 1948-ல் மனித உரிமையை நிலை நாட்டுவதற்கான Universal Declaration of Human Rights பேரறிக்கை பிரகடனமானது. இந்தியாவில் கடந்த 1993-ல் மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது.
இருப்பினும் பட்டினி, விவசாயிகளின் உரிமை, துப்புரவு பணியாளர்களின் நிலை, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, தனிமனித சுதந்திரம் என அனைத்திலும் இந்தியா சரி செய்துகொண்டால் மனித உரிமை இந்த தேசத்தில் நிலைநாட்டப்படும். அதை சீர்செய்ய வேண்டியது மனிதனின் கைகளிலேயே உள்ளது.
டிச.10 - இன்று சர்வதேச மனித உரிமை தினம்.