இந்தியா

சீன நிறுவனத்துக்கு 5ஜி அனுமதி ! - இந்தியா அமெரிக்கா உறவில் பாதிப்பு ஏற்படுமா?

சீன நிறுவனத்துக்கு 5ஜி அனுமதி ! - இந்தியா அமெரிக்கா உறவில் பாதிப்பு ஏற்படுமா?

jagadeesh


இந்தியாவில் அனைத்து நிறுவனங்களுக்கும் சோதனைக்காக 5ஜி அலைக்கற்றை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் சீனாவின் ஹூவேய் நிறுவனத்துக்கும் அனுமதி வழங்குவது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

எதிர்காலம் 5ஜி சேவையை நம்பியுள்ளது. எனவே சோதனைக்காக அனைத்து நிறுவனங்களுக்கும் 5ஜி அலைக்கற்றை ஒதுக்கப்படும். மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் இந்த அறிவிப்பு இந்தியா விரைவில் 5ஜி சேவை தொடங்கப்போகிறது என்பதை உணர்த்தினாலும், சீனாவின் ஹூவேய் நிறுவனத்துக்கும் 5ஜி அலைக்கற்றை வழங்கப்படும் என கூறி இருப்பது விவாதப்பொருளாகியுள்ளது.

சீனாவை தலையிடமாக கொண்ட ஹூவேய் நிறுவனம் உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமாகும். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஹூவேய் நிறுவனம் 5ஜி தொழில்நுட்பத்தை வழங்கி வந்தது. இந்நிலையில், ஹூவேய் நிறுவனம் அமெரிக்க பயனாளர்களின் தகவல்களை திருடி சீனாவில் சேமித்து வைப்பதாகவும் இது தேச பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் எனவும் கூறிய அமெரிக்க அரசு அங்கு ஹூவேய் ஸ்மார்ட்போன்களுக்கு தடை விதித்தது.

இதுவே அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தக போரின் தொடக்கமாக அமைந்தது. சீன அரசுக்காக உளவு பார்ப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளை ஹூவேய் நிறுவனமும், சீன அரசும் மறுத்தது. ஆனால் இதனை ஏற்காத அமெரிக்கா தங்கள் நாட்டில் ஹூவேய் ஸ்மார்ட்போன்களுக்கு தடை விதித்ததோடு நிற்காமல், ஹூவேய்-யின் 5ஜி தொழில்நுட்பத்தை அனுமதிக்காதீர் என நட்பு நாடுகளுக்கும் நிர்பந்தம் அளித்து வருகிறது. அதில் இந்தியாவும் ஒன்று. தற்போதைய சூழலில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், நியூசிலாந்து, தைவான் ஆகிய நாடுகள் ஹூவேயின் 5ஜி தொழில்நுட்பத்துக்கு தடை விதித்துள்ளன. பிரான்ஸ், தென்கொரியா, ஹங்கேரி, தாய்லாந்து, ரஷ்யா, மலேசியா ஆகிய நாடுகளில் ஹூவேய் சாதனங்கள் மூலம் 5ஜி சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் தான் அமெரிக்காவின் நிர்பந்தத்தையும் மீறி இந்தியா ஹூவாய் நிறுவனத்துக்கு 5ஜி அலைக்கற்றையை ஒதுக்க மத்திய அரசு முன்வந்துள்ளது. அமெரிக்காவில் விதிக்கப்பட்ட தடையால் ஹூவாய் நிறுவனம் பின்னடைவை சந்தித்தது. இது அந்நிறுவனத்துக்கு இழப்புகளை ஏற்படுத்தியது. வரும் காலம் மிகவும் கடினமானதாக இருக்கும் என தங்களின் பணியாளர்களுக்கு ஹூவேய் நிறுவன தலைமையிடம் கடிதமும் அனுப்பியது. ஆனால் அதில் இருந்து மீண்டு வரும் விதமாக உலகின் ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்கள் அதிகமுள்ள இந்தியாவில் அந்நிறுவனத்துக்கு 5ஜி அலைக்கற்றை அனுமதி வழங்கப்படுகிறது. மத்திய அரசின் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள ஹூவேய் நிறுவனம், தங்கள் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி என கூறியுள்ளது.

அமெரிக்கா தடை விதித்துள்ள நிலையில் ஹூவேய் போன்களில், கூகுள் சேவை நிறுத்தப்பட்டது. இதையடுத்து கூகுள் மீடியா சர்வீஸூக்கு பதிலாக சொந்தமாக ஹூவேய் மொபைல் சர்வீஸை வழங்குகிறது. கூகுளில் கிடைக்கும் அனைத்து சேவைகளும் இதில் கிடைக்கிறது. தற்போது இந்தியாவில் கால்பதிக்கும் ஹூவேய் நிறுவனம், இந்தியாவிலும் கூகுளுக்கு மாற்றான சேவையை வடிவமைத்து தர முன்வந்துள்ளது. இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள பல்வேறு செயலிகளையும் இதில் ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளையும் அந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் ஹூவேயின் எதிர்காலம் எப்படி இருக்க போகிறது? இதனால் இந்தியா அமெரிக்கா உறவில் பாதிப்பு ஏற்படுமா? என்பது வருங்காலங்களில் தெரிய வரும்.